65–வது குடியரசு தினவிழா : நாடு முழுவதும் கொண்டாட்டம்

pr260114cpr260114g

pr260114fpr260114epr260114d

65–வது குடியரசு தினவிழா இன்று (26.01.2014) நாடு முழுவதும் கோலா கலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. இதற்காக மெரினா கடற்கரை காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

குடியரசு தின விழாவில் பங்கேற்க முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா காலை 7.52 மணிக்கு போக்குவரத்து போலீசார் புடை சூழ பொது மக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி காரில் வந்தார்.

அதைத் தொடர்ந்து கவர்னர் ரோசய்யாவும் பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி வந்தார். முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

பின்னர் அங்கு வந்த கவர்னரை முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வரவேற்று முப்படை தளபதிகள், போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

காலை 8 மணிக்கு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் கவர்னர் ரோசய்யா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது நாட்டுப்பண் இசைக்க இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மலர் தூவியது.

பின்னர் அங்கு நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார்.

பின்னர் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வீரதீர செயல் புரிந்த பொதுமக்களில் 3 பேருக்கும், அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் அண்ணா பதக்கங்களை வழங்கினார். ரூ. 1 லட்சத்துக்கான காசோலைகளையும், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம், சான்றிதழ்களையும் வழங்கினார். பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:–

1. வி.கருப்பையா– திண்டுக்கல் மாவட்டம் (கடந்த 21.10.2013 அன்று காலை 6.30 மணிக்கு கரூர் – திண்டுக்கல் ரெயில் பாதையில் விரிசல் ஏற்பட்டதை கண்டுபிடித்து ரெயில் பாதுகாப்பு தலைமை காவலருக்கு தகவல் தெரிவித்துடன் அப்போது மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலை விபத்தில் இருந்து காக்க தனது உடையை கழற்றி சைகை காட்டி நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டு பல உயிர்களை காப்பாற்றினார்)

2. தெத்தீஸ்வரன்– கோவை மாவட்டம் (வாகராயம் பாளையத்தைச் சேர்ந்த இவர் கடந்த 21–5–2013 அன்று துப்பாக்கி ஏந்திய கொள்ளையர்கள் ரூ. 24.60 லட்சத்தை கொள்ளையடித்து சென்றபோது அந்த வாகனத்தை மடக்கி பிடித்து கொள்ளையர்களை போலீசார் கைது செய்ய உறு துணையாக இருந்தார்.

3. மறைந்த எஸ்.கோபிநாத் – கன்னியாகுமாரி மாவட்டம் (கோட்டார் பகுதியைச் சேர்ந்த இவர் கடந்த 12–1–2014 அன்று தனது நண்பர்களுடன் சொத்த விளை கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது கடலில் மூழ்கி தத்தளித்த 2 சிறுவர்களை கரையில் தூக்கி வீசி காப்பாற்றினார்.

ஆனால் கோபிநாத் கடல் அலையில் சிக்கி இறந்து விட்டார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் கடலில் இறங்கி சிறுவர்களை காப்பாற்றி உயிர் விட்ட அவரது வீரச் செயலை பாராட்டி அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இதை அவரது சார்பில் பிரதிநிதி பெற்றுக் கொண்டார்)

4. எஸ்.பி.ரகமத்துல்லா– கிருஷ்ணகிரி வனச்சரகம் (கடந்த 30–6–2013 அன்று பர்கூர் கண்ணமூர் கிராமத்தில் கிணற்றில் விழுந்த கரடியை மீட்டபோது அது பிடியில் இருந்து தப்பி பொதுமக்களை தாக்கியது. அப்போது ரகமத்துல்லா துணிச்சலுடன் கரடியுடன் போராடி பொதுமக்களை காப்பாற்றினார். இதில் அவருக்கு தலையிலும் முகத் திலும் காயம் ஏற்பட்டது. இவரது வீரதீர செயலுக்காக அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது)

5. குணேந்திரன் – ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் (கடந்த 6–10–2013 அன்று காவிரி ஆற்றில் 3 பசுமாடுகள் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய தகவல் கிடைத்து குணேந்திரனும் மற்ற வீரர்களும் போராடி 2 பசு மாடுகளை மீட்டனர். நடு ஆற்றில் சிக்கிய 3.வது பசு மாட்டை காப்பாற்ற முயன்ற குணேந்திரன் ஆற்று சுழலில் சிக்கி உயிரிழந்தார். இவரது துணிச்சலான செயலுக்காக அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இதை அவரது மனைவி பெற்றுக் கொண்டார்)

6. பேச்சியம்மாள் – மாவட்ட சமூக நல அலுவலர், பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டத்தில் 243 குழந்தை திருமணங்களை தைரியமாக தடுத்தவர். இதற்காக இவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

ஏ.ஆர்.பஷீர் அகமது– கோவை மாவட்டம் (கோவை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்திற்காக பெரிதும் பாடுபட்டவர். 2006–ம் ஆண்டு கோவையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் நடத்திய சர்வதேச அமைதி தின பிரசாரத்தை சிறப்பாக நடத்த காரணமாக இருந்தவர். 2013–ல் விநயாகர் சதுர்த்தி ஊர்வலமும் அமைதியாக நடைபெற காரணமாக இருந்தவர். இவரை பாராட்டும் வகையில் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கமும், ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை – சான்றிதழ் வழங்கப்பட்டது.

1. சுரேஷ்குமார்–கூடுதல் காவலர் கண்காணிப்பாளர், மது விலக்கு அமலாக்க பிரிவு, ஈரோடு (ஈரோடு மாவட்டத்தில் மது விலக்கு வேட்டையை தீவிரப்படுத்தி 3482 மது விலக்கு குற்ற வழக்குகளை கண்டு பிடித்ததுடன் போலி மதுபான கடத்தலையும், எரி சாராயத்தையும் கைப்பற்றினார். அவரது சிறப்புமிக்க பணியை பாராட்டும் வகையில் 2013–ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் பதக்கமும், ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது).

2. மதி – காவல் துணை கண்காணிப்பாளர், மது விலக்கு மத்திய புலனாய்வு பிரிவு, சென்னை. (திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு புதுச்சேரியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட போலி மதுபானங்களை தடுத்ததுடன் தஞ்சாவூரில் போலி மதுபான தொழிற்சாலையையும் கண்டு பிடித்தவர். இவரது மெச்சத்தக்க பணிக்கான காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது).

3. பெரியசாமி –காவல் ஆய்வாளர், மது விலக்கு பிரிவு, சேலம் மண்டலம் (இவரும் திருப்பூர், சேலம் மாவட்டத்தில் இயங்கிய போலி மதுபான தொழிற்சாலைகளை கண்டு பிடித்து கள்ளச் சாராயத்தையும் அழித்தவர். இதற்காக காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது)

4. தேவராஜ் – தலைமை காவலர், ஆப்பக் கூடல் போலீஸ் நிலையம், ஈரோடு மாவட்டம் (இவரும் காங்கேயம் உள்பட பல பகுதிகளில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டதற்காக காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது).

பரமேஸ்வரன் – நசியனூர் கிராமம், ஈரோடு. (திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்ப முறை மூலம் பல ஆண்டுகளாக நெல் சாகுபடி செய்தவர். தற்போது பி.பி.டி. 5204 எண்ணு சான்றழிக்கப்பட்ட நெல் விதையை வாங்கி புதிய தொழில் நுட்பங்களை பெற்று ஏக்கருக்கு 6110 கிலோ கிராம் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளார். இது அதிகமான விளைச்சலாகும். இதற்காக ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையும், ரூ. 3500 மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டது)

பின்னர் பதக்கம் பெற்றவர்களுடன் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் மாணவ – மாணவிகளின் ஆடல் – பாடல் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சாட்டை கொம்பு நடனம், சாந்தோம் புனித ரபேல்ஸ் பெண்கள் பள்ளி மாணவிகளின் தப் பாட்டம் நடனமும், ஜி.ஆர்.டி. மகாலட்சுமி வித்யா மெட்ரிக் பள்ளி மாணவிகளின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதேபோல் எத்திராஜ் பெண்கள் கல்லூரி மாணவிகளின் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டமும், வேப்பேரி ஜெயின் பெண்கள் கல்லூரி மாணவிகளின் பஞ்சாபி கிளாசிக்கல் கிராமிய நடனமும், ராணிமேரி கல்லூரி மாணவிகளின் பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம், ஒயிலாட்டமும் நடைபெற்றது.

பின்னர் செய்தி மக்கள் தொடர்புத் துறை, காவல்துறை, கோ–ஆப்டெக்ஸ், தோட்டக்கலைத்துறை, தீயணைப்புத் துறை உள்பட 25 துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.

பின்னர் 9.13 மணிக்கு விழா நிறைவு பெற்றதும் கவர்னர் ரோசய்யா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டார்.

ராணுவப் படை, கடற்படை, விமானப்படை பிரிவுகளின் அணிவகுப்புகள், கடலோர காவல் படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உள்பட 48 வகையான படைகளின் அணிவகுப்புகள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.