சங்கரராமன் கொலை வழக்கில் 27–ந் தேதி தீர்ப்பு!

shankarraman murderSANKAR RAMAAN  CASE

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் 2004–ம் ஆண்டு கோவில் அலுவலகத்தில் வைத்து 6 பேர் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சங்கர மடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ரகு, அப்பு உள்ளிட்ட 25 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ரவி சுப்பிரமணியன் அப்ரூவராக மாறினார். எனவே 24 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தனர். அவர்களில் கதிரவன் என்பவர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 1873 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 370 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். 712 ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

முதலில் இந்த வழக்கு காஞ்சிபுரம் கோர்ட்டில் இருந்தது. பின்னர் செங்கல்பட்டு செசன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது இந்த வழக்கு மீது தமிழ்நாட்டில் விசாரணை நடத்தப்பட்டால் நியாயம் கிடைக்காது எனவே, வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று சங்கராச்சாரியார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, வழக்கை புதுச்சேரி கோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து 28.10.2005–ல் வழக்கு விசாரணை புதுவை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. 370 சாட்சிகளில் 189 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அப்ரூவர் ரவி சுப்பிரமணியன், சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்ரேயி உள்ளிட்டோர் முக்கிய சாட்சிகளாவர். இவர்கள் உள்பட 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். பின்னர் சங்கரராமன் மனைவி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு மிரட்டல் வந்ததால் பிறழ் சாட்சி அளித்ததாக மாற்றி கூறினார்கள்.

விசாரணை நடந்த காலத்தில் அவ்வப்போது வழக்கு தொடர்பாக தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வந்தது. இதனால் வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகியது.

இன்று (12.11.2013) வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 21 பேர் ஆஜரானார்கள். இதில் பாண்டியன், ரஜினிகாந்த் ஆகியோர் மட்டும் ஆஜராகவில்லை. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள் வழக்கு மீது தீர்ப்பு கூற தங்களுக்கும் ஆட்சேபனை இல்லை என்று கூறினார்கள்.

இதையடுத்து நீதிபதி முருகன் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வருகிற 27–ந் தேதி கூறப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார். இதனால் தான் 8 ஆண்டுகள் கழித்து இப்போது தீர்ப்பு கூறும் நிலைக்கு வழக்கு வந்துள்ளது.