தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை மதிக்காத இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு , பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

Ramadossகாமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறிய கருத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது; காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அந்த மாநாட்டில் இந்தியா நிச்சயமாக பங்கேற்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.

கூட்டாட்சி தத்துவத்தின்படி மாநில சட்டப்பேரவைகள் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களை ஆராய்ந்து சாதகமான முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை மதிக்காமல், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று சல்மான் குர்ஷித் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாமலும், இலங்கையுடன் உறவு வைத்துக் கொள்ளாமலும் தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது? என்று சல்மான் குர்ஷித் கேட்டிருப்பது குரூரமான நகைச்சுவை ஆகும்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவெடுக்கப்படும் என்று ஏற்கனவே பிரதமர் கூறியிருக்கிறார். இதுகுறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுக்காத நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என்று குர்ஷித் கூறுகிறார் என்றால், அவர் பிரதமரை விட அதிக அதிகாரம் பெற்றவரா? என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழக மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் உடனடியாக பதவி நீக்க வேண்டும். காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் எவரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பதுடன், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.