மத்திய அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் முற்றிலும் தவறானது: காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல் காந்தி

rahul_gandhi_தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் இருந்து பாதுகாக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் அவசரச் சட்டம் முற்றிலும் தவறானது என்பது எனது தனிப்பட்ட கருத்து.  அவசரச் சட்டத்தை கிழித்து எறிய வேண்டும். இது அரசியல் முடிவாகும். ஒவ்வொரு கட்சியும் இதைத்தான் செய்கிறது. இந்த முட்டாள்தனமான காரியத்தை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு கட்சியும் தங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. ஒவ்வொரு கட்சியிலும் தவறு இழைக்கப்படுகிறது. இந்த தவறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய தருணம் இது. இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியின் நிலைப்பாட்டை ராகுல் காந்தி தெளிவுபடுத்தியிருப்பதாகவும், அவசர சட்டத்தை ராகுல் எதிர்த்தால் காங்கிரசும் எதிர்க்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் எம்.பி. கூறினார்.

அவசர சட்டம் தொடர்பாக உள்துறை மந்திரி ஷிண்டே, சட்டத்துறை மந்திரி கபில் சிபல் உள்ளிட்ட மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் அக்கறை காட்டாத நிலையில், அவசர சட்டம் வாபஸ் பெறப்படலாம் எனத் தெரிகிறது.