பணக்காரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு சாதகமாக இருந்து வருகிறது: திருச்சி பாஜக மாநாட்டில் நரேந்திர மோடி

bjp-meeting-modimodi trichyகுஜராத் மீனவர்கள் அவ்வப்போது பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டு இன்னலுக்கு ஆளாகின்றனர். அதைப் போலவே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று இன்று (26.09.2013) திருச்சியில் நடந்த பாஜக மாநாட்டில்  குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசினார்.

இந்த இரு மாநில மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் அண்டை நாட்டுப் படையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலைக்கு, மத்திய அரசின் பலவீனமே காரணம். நாட்டின் குடிமக்களுக்காக நடவடிக்கை எடுக்க வலுவற்ற மத்திய அரசை தமிழக மக்கள் தூக்கி எறிய வேண்டும்.

கடந்த கால வரலாற்றில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் தமிழக மீனவர்கள் பெருமளவில் இலங்கைப் படையினரால் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். சொந்த நாட்டு மீனவர்களை அண்டைநாட்டுப் படையினர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் தீவிரவாதிகளால் நம் படையினர் கொல்லப்படுகிறார்கள். அண்டை நாடுகளால், சொந்த நாட்டு மக்களுக்கு இவ்வாறாக மிகப் பெரிய அளவில் இன்னல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற வேளையில், அதே அண்டை நாட்டின் பிரதமருடன் வெளிநாட்டிலே உணவருந்திருக்கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

பிரதமர் மன்மோகன் சிங் எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார். இந்த நாட்டின் கெளரவத்துக்கா? பாதுகாப்புக்கா? அல்லது வேறு நிர்பந்தங்களுக்காக பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்துவதற்கா? எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார்?” மேலும், “நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், அந்த நாட்டின் அரசைத் தூக்கி எறிய வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது”

“இந்த ஆட்சி தொடர்ந்து இன்னும் 5 ஆண்டுகளுக்கு இருக்குமானால், இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று வீதியிலே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நம் நாட்டின் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.

மத்திய அரசின் கொள்கை காரணமாக, தொழிலதிபர்கள், நிறுவனங்கள், இங்குள்ள பெல் நிறுவனம் என அனைத்துத் தரப்பும் பிரச்சினையில் இருக்கிறது. ஆனால், முதல் 50 இடங்களில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு சாதகமாக இருந்து வருகிறது. சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது.