உத்தரகாண்ட் அரசுக்கு ரூ.5 கோடி நிதி உதவி : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

jayalalithaa tn.cmஉத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகள் இழந்து தவிக்கின்றனர். உத்தரகாண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்திருப்பதுடன் ஏராளமான சொத்துக்கள் நாசமாகி உள்ளன. அந்த ஊர் மக்கள் மட்டு மல்லாமல் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்தரி, ஹேம்குண்டு சாகிப் ஆகிய புனித தலங்களுக்கு சென்றவர்களும் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து சென்று அங்கு சிக்கிக் கொண்ட பக்தர்களை மீட்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டு இருந்தேன். அதன் அடிப்படையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 19-ந் தேதி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. உத்தரகாண்டில் சிக்கிய தமிழர்களை பற்றி உறவினர்கள் தரும் தகவல்கள் போன் மூலம் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக பக்தர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வருவது தொடர்பாக 20-ந் தேதி எனது தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. எனது உத்தரவின்பேரில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி தலைமையில் கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் நிர்வாக கமிஷனர் பேரழிவு மேலாண்மை கமிஷனர், வருவாய்துறை அரசு செயலாளர் கொண்ட குழு டேராடூண் சென்றது. அவர்கள் அங்கு மீட்கப்படும் தமிழர்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். டெல்லியில் அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்ததுதடன் தேவையான மருத்துவ வசதி மற்றும் பிற வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. அவர்கள் தமிழ்நாடு அரசு செலவிலேயே சென்னை வர ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக 21-ந் தேதி 83 பக்தர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர். அவர்களை மூத்த அமைச்சர்களும், மற்றும் அதிகாரிகளும் வரவேற்றனர். அதன்பிறகு 22-ந் தேதி 275 பக்தர்கள் மீட்கப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் ஊருக்கு சென்றடைய போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்படும் பக்தர்களுக்கு இதே போல் வசதியை செய்து கொடுக்கப்பட உள்ளது. இந்த நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் உயிரிழந்த மக்களுக்கும் அவர்களது குடும்பத் தினருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

உத்தரகாண்ட் மாநிலம் உடனடியாக தீவிர மீட்பு பணிகளையும், மறுவாழ்வு பணிகளையும், மறு கட்டுமான பணிகளை வருங்காலங்களில் செய்ய வேண்டி உள்ளது. இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசு சார்பிலும் தமிழ்நாடு மக்கள் சார்பிலும் தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். இதன் அடிப்படையில் உடனடி உதவியாக ரூ.5 கோடியை முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உத்தரகாண்ட் மாநில அரசுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளேன். உத்தரகாண்ட் மாநிலம் மேலும் கேட்கும் உதவிகளை செய்வதற்கு தமிழக அரசு எப்போதும் தயராக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply