மதுரை மாநகர B4 கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை – தூத்துக்குடி ரிங் ரோட்டில் அனுப்பானடி “வேலம்மாள் கிராமம்” என்ற இடத்தில் வேலம்மாள் கல்விக்குழும நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன.
அந்த வளாகத்தில் வேலம்மாள் வித்யாலயா CBSE பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 01/03/2022 மதியம் 12 45 மணிக்கு உணவு இடைவேளையின் போது அப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு Bio mathematics B1 பிரிவில் படித்து வரும் மதுரை, கடச்சனேந்தல், அந்தனேரி பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கும், அதேபள்ளியில் 11 ஆம் வகுப்பு Bio Computer Science படித்து வரும் மதுரை, அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகறாறு மோதலாக உருவெடுத்துள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அவனியாபுரம் பகுதியை சேர்ந்த மாணவர் தான் மறைத்து வைத்திருந்த பதமான கத்தியால், கடச்சனேந்தல், அந்தனேரி பகுதியை சேர்ந்த அந்த மாணவரை வயிற்றில் கிழித்துள்ளார். இதில் அந்த மாணவனுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. காயமடைந்த அந்த மாணவன் கதறுவதைக் கண்டு அருகில் இருந்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே அந்த பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில், காயமடைந்த அந்த மாணவரை மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன் பின்னர் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து B4 கீரைத்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் (Police Memo Intimation Number : 8595/2022) கீரைத்துறை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் M.துரைப்பாண்டி அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று கத்தியால் குத்தப்பட்ட அந்த மாணவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தினேஷ முருகன் என்பவர் முன்னிலையில் அந்த மாணவனிடம் வாக்குமூலம் பெற்று இந்திய தண்டனை சட்டம் பிரிவு 324 -கீழ் (ஆயுதங்கள் மூலம் தன்னிச்சையாக காயம் விளைவித்தல்) வழக்குப் பதிவு (Crime No : 161/2022) செய்துள்ளார்.
இது மாணவர்களின் உயிர் மற்றும் எதிர்காலம் சம்பந்தப்பட்ட செய்தி என்பதாலும், அவர்கள் இருவரும் சிறார்கள் என்பதாலும், இச்செய்தியில் அவர்களின் பெயர் மற்றும் படங்களை இதழியல் தர்மம் கருதி இங்கு நாங்கள் பதிவு செய்யவில்லை என்பதை, நமது வாசகர்களின் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த துயர சம்பவம் சம்பந்தமாக விரிவான உண்மை தகவல்களை தெரிந்து கொள்வதற்காக, வேலம்மாள் பள்ளி நிர்வாகத்தை கடந்த 24 மணி நேரத்தில் பல முறை தொடர்பு கொண்டோம்.
ஆனால், அப்படி ஒரு சம்பவம் அந்த பள்ளியில் நடந்ததாகவே அவர்கள் நம்மிடம் காட்டிக்கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து முறையான தகவல் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று (03/03/2022) காலை 11: 39 மணிக்கு அந்தப் பள்ளி நிர்வாகத்தை நாம் மீண்டும் தொடர்பு கொண்டு அந்தப் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் குறித்து நமக்கு கிடைத்த ஆதாரபூர்வமான தகவலை அவர்களிடம் தெரிவித்தோம்.
அதனடிப்படையில் வேறு வழியில்லாமல் இன்று (03/03/2022) மதியம் 12:04 மணி அளவில் அந்த பள்ளியில் பணியாற்றும் நபர் ஒருவர் நம்மிடம் பேசினார்.
சம்பவம் நடந்தது உண்மைதான், அந்த இரு மாணவர்களும் நண்பர்களாகதான் இருந்துள்ளார்கள். இது அவர்கள் இருவருக்குமிடயே விளையாட்டு போல நடத்த எதிர்பாராத நிகழ்வு; மற்றபடி இது திட்டமிட்ட சம்பவம் இல்லை. காயமடைந்த மாணவர் நலமாக உள்ளார், கத்தி வைத்திருந்த அந்த மாணவனை TC கொடுத்து அனுப்பிட்டோம் என்றார்.
இந்த விளக்கத்தை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எழுத்துபூர்வமாக அளித்து, இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாமே? இதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?-என்று நாம் கேள்வி எழுப்பினோம்.
பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகி தற்சமயம் பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளார்கள். அவர்கள் வந்தவுடன் இதை நான் அவர்களிடம் தெரிவிக்கிறேன் என்று பேச்சை முடித்துக் கொண்டார்.
அது சரி, பள்ளி மாணவன் கைக்கு கத்தி எப்படி வந்தது? அதுவும் மதிய உணவு நேரத்தில் கத்தியோடு அங்கு வர வேண்டிய அவசியம் என்ன? கத்தி வைத்திருந்த மாணவனும், காயம்பட்ட மாணவனும் விடுதியில் தங்கி படித்து வந்தார்களா?மாணவர்களுக்கு இடையே ஏற்கனவே ஏதாவது முன் விரோதம் இருந்ததா? இதற்கு முன்பு இப்படி ஏதாவது சம்பவம் அப்பள்ளியில் நடந்து உள்ளதா? இக்கேள்விகளுக்கு விரைவில் நிச்சயம் விடை கிடைக்கும்.
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
