தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 06-3-2017 அன்று இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் பிட்ஜோ என்ற அப்பாவி இந்திய மீனவர் பலியானார். அதன் பின்னர், இலங்கை சிறைகளில் இருந்த 85 மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், இன்று மீண்டும் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இலங்கை கடற்படை மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பாக் நீரிணையில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றுள்ள 10 மீனவர்கள் மற்றும் 129 படகுகளை விடுவிக்க வெளியுறவுத்துறை மூலம் தாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மீனவர்கள் பயனடையும் வகையில், சிறப்பு தொகுப்பு திட்டத்திற்காக கேட்கப்பட்ட 1,650 கோடி ரூபாய் நிதியை விரைவாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.
