அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துளார். இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவருக்கு வாரிசாக யார் வர வேண்டும் என்பதை பற்றியெல்லாம் எதுவும் கூறவில்லை. ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை.
மக்கள் அனைவரும் ஏற்க கூடிய தலைமை ஒன்றுதான் வரவேண்டும். யாரையும் கட்டாயப்பபடுத்தி வர வைக்க கூடாது. சுய லாபத்திற்காக அமைச்சர்கள் செயல்படுகின்றனர். நிகழும் சம்பவங்கள் ஏற்புடையதாக இல்லாததால் கட்சியிலிருந்து விலகுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
கட்சியில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து அதிமுக தலைமைக்கு நடிகர் ஆனந்தராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நடிகர் ஆனந்தராஜ் ஆகிய நான் புரட்சித்தலைவி அம்மாவால் இந்த கழகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டேன். என்னை கழகத்தின் உறுப்பினராக இணைத்துக் கொண்ட நாளில் இருந்து இன்று வரை கழக கட்டுப்பாட்டையும், கழக கண்ணியத்தையும் ஒரு துளியும் மீறாமல் உண்மையான தொண்டனாக இந்த கழகத்துக்கு உழைத்தேன்.
அம்மாவை என் தலைவியாக ஏற்றுக் கொண்ட நான், அம்மாவின் இழப்பு என் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என்ற வலியின் காரணமாக கழகத்தில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன். என்னை கழகத்தில் இணைத்துக் கொண்ட என் தலைவி அம்மாவுக்கும், இத்தனை காலம் என்னோடு ஒத்துழைத்த கழக நிர்வாகிகளுக்கும், ராசியான நடிகர் என்று வாய் நிறைய அழைத்த அம்மாவின் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சமீபத்தில் நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்த கருத்து!- (வீடியோ)
-கே.பி.சுகுமார்.
