உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும் இந்தியாவின் வளர்ச்சி வலுவாகவும், நம்பகத்தன்மையுடனும் இருப்பதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா கடன் மூலதனச் சந்தை உச்சி மாநாடு 2026’-ல் பேசிய அவர், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியா 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஏற்றுமதி நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 570 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளதாகவும், இந்த ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை அடைய இந்தியா முன்னேறி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதுடன், நாட்டின் பொருளாதாரத்தை 30 டிரில்லியன் டாலராக உயர்த்துவதே அரசின் இலக்கு என்றார்.
இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் துறை வளர்ச்சி, வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகக் கூறினார். இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், உற்பத்தித் துறையில் முதலீடுகளை அதிகரித்தல், ஏற்றுமதியை விரிவுபடுத்துதல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் கடன் மூலதனச் சந்தையை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவை என அவர் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்
