மேகதாது அணை விவகாரம்: கர்நாடக அரசையும், ஒன்றிய அரசையும் கண்டித்து நவம்பர் 28-ல் தஞ்சையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – வைகோ அழைப்பு!

மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசையும், தமிழ்நாட்டின் காவிரி உரிமைக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படும் ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து, நவம்பர் 28-ஆம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளுக்குத் தடை விதிக்கவும், ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை அகற்றவும் கோரி கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராகக் கர்நாடக அரசு ஏற்கெனவே 2021 ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் புதிய மனுவைத் தாக்கல் செய்திருப்பது அடாவடித்தனமான செயல் என வைகோ விமர்சித்துள்ளார்.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கின்போது கடலில் கலக்கும் உபரி நீரைப் பயன்படுத்தி, வறட்சியால் பாதிக்கப்படும் தென் மாவட்டங்களின் பாசன மற்றும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதே காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் முதல் கட்டத்தில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 42,170 ஏக்கர் நிலங்களும், இரண்டாம் கட்டத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 23,245 ஏக்கர் நிலங்களும், மூன்றாம் கட்டத்தில் விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 44,547 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் கடலில் கலக்கும் உபரி நீரைத் தென் மாவட்டங்களுக்குத் திருப்பிவிடும் வகையில், கட்டளைக் கால்வாயில் இருந்து தெற்கு வெள்ளாறு, வைகை வழியாக குண்டாறு வரை கால்வாய்கள் அமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் முதல் கட்டப் பணிகளுக்கு 2020-ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கும், ஆற்றில் கிடைக்கும் உபரி நீரைப் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள வைகோ, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதைத் தமிழ்நாடு எதிர்ப்பதற்கான காரணம் வேறு என்றும், உபரி நீரைப் பயன்படுத்தும் காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் தடுப்பதற்கு கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறி மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதாகவும், ஒன்றிய பாஜக அரசு கர்நாடகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நவம்பர் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் தொடர்வண்டி நிலையம் எதிரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ அறிவித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ்நாட்டின் உரிமைக்காகப் போராடும் இயக்கங்களின் பிரதிநிதிகள், விவசாய சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் காவிரி உரிமைக் குரலை வலிமையாக ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றும் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply