மாறிவரும் உலக அரசியல் சூழலில், உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதுடன், எதிர்காலத்தில் உருவாகக்கூடிய பாதுகாப்புச் சவால்களையும் முன்கூட்டியே கணித்து தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் நவம்பர் 26, 2026 அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (National Defence College – NDC) 66-வது பயிற்சி வகுப்பின் பட்டமளிப்பு மற்றும் நிறைவு விழாவில் பங்கேற்று அவர் உரையாற்றினார்.
அப்போது, உலக நாடுகளுக்கு இடையிலான அதிகாரச் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள், புதிய அரசியல் மற்றும் பாதுகாப்பு சக்திகளின் எழுச்சி, பாரம்பரிய கூட்டணிகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் போர் முறைகளில் ஏற்பட்டுவரும் பரிணாம வளர்ச்சி ஆகியவை உலகப் பாதுகாப்புச் சூழலை மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், வழக்கமான ராணுவ அச்சுறுத்தல்களுடன் இணையவழித் தாக்குதல்கள், தவறான தகவல் பரப்புதல், பொருளாதார அழுத்தங்கள், விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் கலப்புப் போர் முறைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுகாப்பு, அமைதி மற்றும் மோதல் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் குறைந்து வருவதாகவும் கூறினார்.
இந்தியாவின் புவியியல் அமைப்பு, நீண்ட நில எல்லைகள், கடல்சார் நலன்கள் மற்றும் அதிகரித்து வரும் சர்வதேசப் பொறுப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தேசியப் பாதுகாப்பிற்கான தொலைநோக்குப் பார்வை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
தேசியப் பாதுகாப்புக் கொள்கைகளை உருவாக்குவதில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், பாதுகாப்புப் படைகள், குடிமைப் பணிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் அனுபவங்களையும் அறிவுத் திறனையும் நாட்டின் பாதுகாப்புக் கொள்கை உருவாக்கத்தில் பயன்படுத்த வேண்டும் என்றார்.
ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் எல்லைப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, முக்கியத் தொழில்நுட்பங்கள், பொருளாதாரப் பாதுகாப்பு, முக்கியக் கட்டமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
மேலும், பயிற்சியாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் வெறும் கல்வி ஆய்வுக் கட்டுரைகளாக மட்டும் இருக்கக்கூடாது. அவை நடைமுறைக்குப் பயன்படும் தெளிவான பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கைகளாகத் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய அமைச்சகங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேசியப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, முழுமையான தகவல்கள் கிடைக்காத சூழலிலும் தலைவர்கள் சரியான மாற்று வழிகளை மதிப்பிட்டு முடிவெடுக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார். எனவே, தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் நடத்தப்படும் உத்திசார் விளையாட்டுப் பயிற்சிகளில் (Strategic Gaming Exercises) செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை இணைத்து, நிஜமான பாதுகாப்புச் சூழல்களை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், ரோபோட்டிக்ஸ், ஆளில்லா தானியங்கி வாகனங்கள், விண்வெளித் தொழில்நுட்பங்கள் மற்றும் குறைக்கடத்திகள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான சிறப்புப் பயிற்சி அமர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
மேலும், ஐஐடி மெட்ராஸ் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் உத்திசார் தலைமைத்துவம் மற்றும் பொதுக் கொள்கைக்கான நிர்வாக எம்பிஏ (Executive MBA in Strategic Leadership and Public Policy) திட்டம், தேசியப் பாதுகாப்புக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தை எடுத்துரைத்த அவர், தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் உருவாக்கும் நட்புறவும் தொழில்முறைத் தொடர்புகளும் எதிர்காலத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவும் என்றார்.
சர்வதேச உத்திசார் ஈடுபாட்டுத் திட்டத்தின் (INSTEP) நான்காவது நிகழ்வில், 22 நாடுகளைச் சேர்ந்த 25 வெளிநாட்டுப் பங்கேற்பாளர்கள், இந்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் குடிமைப் பணிகளைச் சேர்ந்த 10 மூத்த அதிகாரிகள், பாதுகாப்புத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த 3 அதிகாரிகள் எனப் பலர் பங்கேற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விழாவில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி ஏர் மார்ஷல் மனீஷ் குமார் குப்தா, ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர் கே. முரளி, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
66-வது தேசிய பாதுகாப்புக் கல்லூரி பயிற்சி வகுப்பு:
தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 66-வது பயிற்சி வகுப்பு ஜனவரி முதல் நவம்பர் வரை 47 வாரங்கள் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மொத்தம் 122 அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களில் 40 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்திய பாதுகாப்புப் படைகள், இந்தியக் குடிமைப் பணிகள், இந்தியக் காவல் பணிகள் மற்றும் அரசின் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இதில் இடம்பெற்றனர்.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், பூடான், பிரேசில், எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், கென்யா, கஜகஸ்தான், மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.
இந்தப் பயிற்சியில் இந்தியாவின் பாதுகாப்பு உத்திகள், பொருளாதாரப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சர்வதேசப் பிரச்சினைகள், சர்வதேசப் பாதுகாப்புச் சூழல், இந்தியாவின் உத்திசார் அண்டை நாடுகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு உத்திகள் உள்ளிட்ட ஆறு முக்கியப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
எம்.பிரபாகரன்
