புதுடெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 62-வது கூட்டத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 147-வது கூட்டத்திலும், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ஆனால், கர்நாடக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி நீர் கிடைக்காததால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் குருவை, சம்பா, தாளடி பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இயற்கை சீற்றங்களுடன் காவிரி நீர் பற்றாக்குறையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் புதிய உத்தரவை கர்நாடக அரசு உடனடியாக நிறைவேற்றுவதை உறுதிசெய்ய ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழக டெல்டா விவசாயத்திற்கு காவிரி நீர் மிகவும் அவசியமானது என்பதை கர்நாடக அரசு உணர்ந்து, கூட்டாட்சித் தத்துவத்திற்கு மதிப்பளித்து எவ்வித காலதாமதமும் இன்றி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
எஸ்.திவ்யா
