புவிசார் திறன்கள் நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சியின் முக்கிய காரணியாக அமையும்: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிஜேந்திர சிங்.

புவிசார் திறன்கள் நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய காரணியாக அமையும் என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

புதுதில்லியில் இன்று நடைபெற்ற புவிசார் மாற்றத்திற்கான அரசு-தொழில்துறை ஒருங்கிணைப்பு குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்தார்.

புவிசார் துறையை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள், சவால்கள் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள், தொழில்துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற விவாதத்திலும் அமைச்சர் பங்கேற்றார்.  பின்னர், இதுதொடர்பான கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார்.

புவிசார் தகவல்கள் நில வரைபடத்தை தயாரித்தல், நில அளவை செய்வதற்கான தொழில்நுட்ப வளம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான தேசிய சொத்தாக உருவெடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  புவிசார் துறையில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாரம்பரிய, அதிக உடல் உழைப்பு தேவைப்படும் நில அளவைப் பணிகளை செயற்கைகோள் அடிப்படையில் வரைபடம் தயாரிக்கவும், ட்ரோன்கள் கணினி பயன்பாடுகள் அடிப்படையிலான நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது தொழில்நுட்பம், கணினி பயன்படுத்தும் திறன்களைக் கொண்ட இளம் தொழில் வல்லுநர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் கூறினார்.  சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும், சாத்தியமான வர்த்தக மாதிரிகளை உருவாக்குவதற்கும், புத்தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும், பொதுத் துறை – தனியார் துறையின் ஒருங்கிணைப்பு அவசியம் என்று டாக்டர் ஜிஜேந்திர சிங் வலியுறுத்தினார்.

Leave a Reply