சென்னை: தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
மேலும், 40 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்களை அமைப்பதற்காக Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்கவும், அவர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும் வாய்ப்பு உருவாகும்.
இதனைத் தொடர்ந்து, 59-வது மாநில அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.25,000 மதிப்பிலான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும், அகில இந்திய தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற 60 மாணவ, மாணவியருக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி அவர்களைப் பாராட்டினார்.
அதே நிகழ்ச்சியில், 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் திறன்களை வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்துறையின் தேவைகளுக்கு ஏற்ப திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் இத்தகைய முயற்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.பி.சுகுமார்
