மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், செயற்கை போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 9.139 கிலோ மெத்தாம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 20ஆம் தேதி, போபாலில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து முனையத்தில் (ISBT) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி ஆபத்தான செயற்கை போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கான DRI அமைப்பின் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ரகசியத் தகவலின் அடிப்படையில் நடவடிக்கை
குறிப்பிட்ட ரகசியத் தகவலின் அடிப்படையில், டெல்லியிலிருந்து பெங்களூருவுக்குப் பேருந்தில் பயணம் செய்த இந்திய ஆண் பயணி ஒருவரை, பேருந்து போபால் ISBT முனையத்தை வந்தடைந்தபோது DRI அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அந்தப் பயணியின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, சல்வார் உடைகள் வைக்கப்பட்டிருந்த பாக்கெட்டுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த படிக வடிவிலான மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
நடுத்தர அளவிலான இரண்டு டிராலி பைகளில் எடுத்துச் செல்லப்பட்டிருந்த 11 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் மொத்தம் 9.139 கிலோ போதைப்பொருள் இருந்தது. களப் பரிசோதனையில் அது மெத்தாம்பெட்டமைன் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் சட்டம், 1985 (NDPS Act) கீழ் அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.
வடகிழக்கு மாநிலங்கள், தமிழகத்திலும் போதைப்பொருள் பறிமுதல்
நாட்டில் செயற்கை போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில்:
- வடகிழக்கு பிராந்தியம்: மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் 231.8 கிலோ மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகளை DRI பறிமுதல் செய்தது.
- தமிழ்நாடு: இலங்கைக்கு கடல் வழியாகக் கடத்திச் செல்லத் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் 137 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தச் சம்பவங்கள், நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து, சர்வதேச எல்லைப் பகுதிகள் மற்றும் கடலோரப் பாதைகள் எனப் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி செயற்கை போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், அதன் பரவலான தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க DRI உறுதி
ரகசியத் தகவல்களின் அடிப்படையில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளைச் சீர்குலைத்து, ஆபத்தான போதைப்பொருட்கள் சட்டவிரோதச் சந்தைகளைச் சென்றடைவதைத் தடுப்பதில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
