மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மேம்படுத்தப்பட்ட வேளாண் இணையதளத்தை இன்று (19.10.2026) முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த இணையதளம், நடைமுறைத் தடைகளையும் இடைத்தரகர்களையும் நீக்கி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அரசுத் திட்டங்கள், நிதியுதவிகள், நம்பகமான வேளாண் தகவல்களை அவர்களின் கைபேசிகளில் நேரடியாகவும் எளிதாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடக்க விழாவில் உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அரசு எல்லா நேரங்களிலும் அவர்களின் கைப்பேசிகள் மூலம் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதே பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். தொழில்நுட்பம் விவசாயிகளையும் கிராமப்புற சமூகங்களையும் சென்றடைந்து, விவசாயிகளின் வாழ்க்கையை எளிதாக்கும்போதுதான் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறும் என்று அவர் கூறினார். மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் மூலம், அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெற அல்லது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விவசாயிகள் இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது வெவ்வேறு இணையதளங்களைப் பயன்படுத்தவோ தேவையில்லை என்று அவர் தெரிவித்தார். இந்தத் தளம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பரந்த வேளாண் சூழலமைப்பிற்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தை உருவாக்குவதாக அவர் தெரிவித்தார். நம்பகமான தகவல்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு சௌகான், இந்த இணையதளம் துல்லியமாகவும், தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதாகவும் இருப்பதை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். விவசாயிகள் இந்த இணையதளத்தையும் மற்ற டிஜிட்டல் கருவிகளையும் திறம்படப் பயன்படுத்த உதவும் வகையில், நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் ஒரு சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்படும் என்றும் திரு சிவராஜ் சிங் சௌகான் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண் துறைச் செயலாளர் திரு ஆதிஷ் சந்திரா, கூடுதல் செயலாளர் பிரமோத் மெஹர்தா, டிஜிட்டல் வேளாண்மைப் பிரிவின் மூத்த அதிகாரிகள், தேசிய தகவல் மையத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திவாஹர்
