காவலர் நினைவு தினத்தையொட்டி காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மரியாதை செலுத்தினார்.

காவலர் நினைவு தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல் துறையினருக்கு மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தினார். அப்போது, போதைப் பொருளுக்கு எதிராகப் போராடுதல் என்ற செய்தியை வலியுறுத்தி நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரு சக்கர வாகனப் பேரணியை தொடங்கி வைத்தார். 

அப்போது உரையாற்றிய திரு அமித் ஷா, சுதந்திரம் பெற்றது முதல் தற்போது வரை நாட்டிற்கான சேவையில் ஈடுபட்டு தங்களுடைய உயிரைத் தியாகம் செய்த துணிச்சல்மிக்கக் காவல் துறையினருக்கு மரியாதை செலுத்த அனைவரும் கூடியுள்ளோம் என்று தெரிவித்தார்.  சுதந்திரம் பெற்று சுமார் எட்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்தியா தற்போது உலகின் கௌரவமிக்க, மரியாதைக்குரிய இடத்தில் இருப்பதாகக் கூறினார்.  இச்சாதனைக்கான அடித்தளம் நமது வீரர்களின் தியாகங்களில் உள்ளதாக தெரிவித்தார்.  நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பைப் பராமரிக்கவும், எல்லைகளை காக்கவும் அந்த வீரர்கள் தங்களுடைய உயிரை தியாகம் செய்திருக்காவிட்டால் தற்போது நாம் எந்த இடத்தில் இருப்போம் என்பதை யாராலும் கற்பனைக் கூட செய்ய முடியாது என்று அவர் கூறினார்.

இந்திய காவல் துறையினருக்கு 2026-ம் ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார்.  பல தசாப்தங்களாக இந்தியாவில் இருந்த நக்சல் செயல்பாடுகளிலிருந்து 2026 மார்ச் 31 அன்று நாடு விடுபட்டதாக அவர் கூறினார்.  நக்சல் நடவடிக்கையால் 1981-ம் ஆண்டு முதல் 2026 மார்ச் மாதம் வரை நாடு பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டதாக அவர் கூறினார்.  இக்காலகட்டத்தில், பல துணிச்சல்மிக்க பாதுகாப்பு படையினரும், அப்பாவி குடிமக்களும் தங்களுடைய உயிரை இழந்ததாக தெரிவித்தார். 3,600-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் உயிர் தியாகம் செய்ததாகவும், சுமார் 13,700 அப்பாவி குடிமக்கள் உயிர் இழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்

Leave a Reply