சுரங்க நில மறுபயன்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்தும் சுவிகல்ப் முன்முயற்சிக்கு ஸ்கோச் தங்க விருது!

மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பு, சுரங்கப் பணிகளுக்குப் பிந்தைய நிலங்களை நிலையான முறையில் அறிவியல்ரீதியில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கான பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திட்டங்களை முறையாகத் தேர்வு செய்ய தரவு அடிப்படையிலான சுவிகல்ப் எனும் சுரங்க மறுபயன்பாட்டு உள்நாட்டு மென்பொருளை அந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் சார்ந்த காரணிகளை ஆய்வு செய்து தரவரிசைப்படுத்தும் இக்கருவி, பொருத்தமான திட்டங்களை அடையாளம் காண உதவுகிறது.

இத்தகைய நவீன செயல்பாட்டிற்காக, ‘டிஜிட்டல் செயல்பாட்டுத் திறன் – தரவு அடிப்படையில் முடிவெடுத்தல்’ பிரிவின் கீழ் சுவிகல்ப் முன்முயற்சிக்கு 2026 செப்டம்பர் 26 அன்று 2026-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான ஸ்கோச் தங்க விருது வழங்கப்பட்டது. சிறந்த நிர்வாகம், புதுமைப்படைப்பு, தொழில்நுட்பத் தளத்தில் பொதுமக்களுக்குப் பயனளிக்கும் மாற்றங்களை ஏற்படுத்தியமைக்காக இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.

சுரங்கம் மூடல், நில மறுபயன்பாடு தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதை ஊக்குவிக்க, சுவிகல்ப் சம்வாத் என்ற தேசிய இணையவழிக் கருத்தரங்கையும் நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பு நடத்தியது. நிலக்கரி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், துறைசார் வல்லுநர்கள் பங்கேற்ற 12 கருத்தரங்குகள் வாயிலாகப் புதுமையான தீர்வுகள், உள்ளூர் மக்களின் பங்களிப்பு, சுற்றுலா மேம்பாடு, புதிய வாழ்வாதார வாய்ப்புகள், நிதி ஆதாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்றுவதையும் கடந்து, சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு, சமூக வளர்ச்சி ஆகியவற்றை முன்னெடுக்கும் வகையில் நிலக்கரி நிறுவனங்களின் புரிதலை இது மேம்படுத்தியுள்ளது. மூடப்பட்ட சுரங்கங்களை உற்பத்தித்திறன் கொண்ட சொத்துகளாக மாற்றி, நீடித்த பிராந்திய வளர்ச்சியை முன்னெடுத்தல் என்ற மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இம்முயற்சிகள் வலுசேர்க்கின்றன.

Leave a Reply