மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இன்று (14.09.2026) குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள நலியாவில் அமைந்துள்ள கானமயில் (Great Indian Bastard) பறவைகளின் வாழ்விடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்ச் பகுதி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான கானமயில் பாதுகாப்பு, வாழ்விட மேலாண்மை நடவடிக்கைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, தற்போதைய முயற்சிகளை அவர் ஆய்வு செய்தார்.
அமைச்சருடன், குஜராத்தின் வனத்துறை அமைச்சரான திரு அர்ஜுன் மோத்வாடியாவும் உடன் சென்றார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, திரு பூபேந்தர் யாதவ், இந்திய வனவிலங்கு நிறுவனம், குஜராத் வனத்துறை, அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடினார்.
ஜிஐபி எனப்படும் கானமயில் வாழ்விட நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கள முன்னேற்றம் குறித்து அமைச்சருக்கு விளக்கப்பட்டது . குஜராத் வனத்துறை, இந்திய வனவிலங்கு நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளை திரு பூபேந்தர் யாதவ் பாராட்டினார். மேலும், வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளுக்காக 33 புதிய ரோந்து வாகனங்களையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த வாகனங்கள், கட்ச் வட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளில் வனப் பாதுகாப்பு, வன மேம்பாடு, வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் .
அதனைத் தொடர்ந்து அமைச்சர், சாயராவில் உள்ள ஹரியாலு கடலைத் தோட்டத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு சாயரா வன் கவச் முயற்சி, அதனுடன் தொடர்புடைய தேனீ வளர்ப்புப் பிரிவு குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. அவர் அவ்விடத்தில் மரம் நட்டு, சாயரா வன் கவச்-ஐத் தொடங்கி வைத்தார்.
மியாவாக்கி முறையின் அடர்த்தியான, பல அடுக்குக் காடு வளர்ப்பைப் பின்பற்றி 9.46 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட சாயரா வன் கவச், கட்ச்சின் உப்புத்தன்மை, குறைந்த நீர்நிலைகளுக்கு ஏற்ற 47 உள்ளூர் இனங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளைக் கொண்டுள்ளது. இந்த மாதிரித் திட்டம், உள்ளூர் வெப்பநிலையை 1.5–2°C வரை குறைத்து, நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு உதவுவதோடு, மண் அரிப்பைத் தடுத்து, பறவைகள், பூச்சிகள், சிறு வனவிலங்குகளுக்கு ஒரு இயற்கை வாழ்விடத்தை வழங்குவதோடு, சூழல் சுற்றுலா, சுற்றுச்சூழல் கல்வி, உள்ளூர் வேலைவாய்ப்புக்கான தளமாகவும் செயல்படும். ஜகாவ்வில், அமைச்சர் சதுப்புநில நாற்றங்காலைப் பார்வையிட்டார்.
திவாஹர்
