எஃகு கசடு சாலைகள் கட்டுமானச் செலவை 40% வரை குறைத்து, நான்கு மடங்கு அதிக வலிமையை வழங்கும்: டாக்டர் ஜிதேந்திர சிங்.

எஃகு கசடு சாலைத் தொழில்நுட்பம், வழக்கமான சாலைகளை விட நான்கு மடங்கு அதிக வலிமையை வழங்குவதோடு, சாலை கட்டுமானச் செலவுகளை சுமார் 40 சதவீதம் குறைக்கும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு) ஆன டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார். இந்தத் தொழில்நுட்பம், பொருத்தமான பயன்பாடுகளில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே பராமரிப்பு தேவைப்படும் வகையில், பராமரிப்புச் சுழற்சியையும் கணிசமாக நீட்டிக்க முடியும் என்றும், இது சாலைப் பொறியியலுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உள்கட்டமைப்புப் பொருளாதாரத்திற்கும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு திருப்புமுனையாக அமைகிறது என்றும் அவர் கூறினார்.

உள்நாட்டுத் தொழில்நுட்பமானது, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தைத் தாண்டி ரயில்வே, பிற அரசுத் துறைகள், மாநில அரசுகள், தனியார் கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உள்கட்டமைப்பு இயக்குநர்கள் வரை விரிவுபடுத்தப்பட்டு, ஒரு திட்டத்திலிருந்து பல திட்டங்களுக்கும், ஒரு மாநிலத்திலிருந்து பல மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்தார்.

புது தில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர்-மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சிஎஸ்ஐஆர்-சிஆர்ஆர்ஐ) மற்றும் ஜிண்டால் ஸ்டீல் லிமிடெட் இணைந்து மேற்கொண்ட “பதப்படுத்தப்பட்ட எஃகு கசடு கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட உலகின் மிக நீளமான சாலை” என்ற கின்னஸ் உலக சாதனை வழங்கும் விழாவில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். சத்தீஸ்கரின் ராய்கரில் உள்ள இந்த 1.85 கி.மீ நீளமுள்ள சாலையானது, எஃகு உற்பத்தியின் துணைப் பொருளாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட எஃகு கசடை, சாலை கட்டுமானத்திற்கான கலவைகளாக மாற்றும் ஒரு உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது. இந்த நிகழ்ச்சியில், சாலையின் மெய்நிகர் திறப்பு விழா, ஒரு அறிவியல் ஆவணப்படத்தின் வெளியீடு, சிஎஸ்ஐஆர்-சிஆர்ஆர்ஐ மற்றும் ஜிண்டால் ஸ்டீல் இடையே தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடுதல், “ஸ்டீல் கிரிட்” வணிகக்குறிப்பின் அறிமுகம் மற்றும் திட்டக் குழுவினருக்கான அங்கீகாரம் ஆகியவையும் இடம்பெற்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வரும் ‘கழிவிலிருந்து செல்வம்’ என்ற மறுசுழற்சி வழிமுறைகள் உட்பட, இந்த அரசாங்கத்தின் ஒன்றுக்கும் மேற்பட்ட முதன்மை முன்னுரிமைகளை இந்த வெற்றிகரமான முயற்சி ஒரே நேரத்தில் நிறைவேற்றுகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

Leave a Reply