பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் சந்திப்பு.

PM meeting with the President of Russia, Mr. Vladimir Putin on the sidelines of the 18th BRICS Summit, in New Delhi on September 11, 2026.

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.09.2026) புதுதில்லியில், ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை சந்தித்தார். இந்த ஆண்டில் இது அவர்களின் இரண்டாவது சந்திப்பாகும். முன்னதாக, 2026 ஆகஸ்ட் 31 அன்று பிஷ்கெக்கில் நடைபெற்ற 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் சந்தித்திருந்தனர்.

அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, திறன் பரிமாற்றம், மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். 2026 செப்டம்பர் 9 முதல் 11 வரை இந்தியாவில் முதன்முறையாக நடைபெற்ற ரஷ்யாவின் சர்வதேச தொழில் கண்காட்சியான “இன்னோப்ரோம் இந்தியா” என்ற கண்காட்சிக்கு அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். வர்த்தக, தொழில் உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதில் அதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர். இரு தலைவர்களும் இன்னோப்ரோம் இந்தியா கண்காட்சியைப் பார்வையிட்டு, பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினர்.

பலதரப்பு அரங்கில், குறிப்பாக 2026-ம் ஆண்டுக்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் பிரிக்ஸ் அமைப்பில், இந்தியா-ரஷ்யா இடையேயான ஈடுபாடு குறித்து தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். கடல்வழி வர்த்தகத்தைப் பாதித்துள்ள மேற்கு ஆசியா, கருங்கடல் பிராந்தியத்தில் உள்ள மோதல்கள், இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த முக்கிய பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே வழி என்றும், அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளின் பின்னணியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து, மீள்திறனைக் காட்டியுள்ள இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பு முன்னுரிமை பெற்ற உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

24-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக ரஷ்யாவிற்கு வருகை தருமாறு அதிபர் புதின் பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். உச்சி மாநாட்டின் தேதிகள் தூதரக வழிகள் மூலம் பரஸ்பர வசதிக்கேற்ப முடிவு செய்யப்படும்.

Leave a Reply