வணிகம், வர்த்தகம், முதலீடு தொடர்பான இந்தியா – ஆப்கானிஸ்தான் கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் 2026 செப்டம்பர் 1 அன்று காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தகம், தொழில்துறை, சுங்கம், ஒழுங்குமுறை அமைப்புகள், தூதரக பிரதிநிதிகள் உட்பட இந்தியா – ஆப்கானிஸ்தான் நாடுகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, இருதரப்பு வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் ஆய்வு செய்தனர். அத்துடன், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேலும் எளிதாக்குவது குறித்தும், வர்த்தக உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர்.
வர்த்தகத்தை எளிதாக்குதல், சுங்க ஒத்துழைப்பு, ஆப்கானிஸ்தான் வர்த்தகர்களுக்கான விசா நடைமுறையை எளிதாக்குதல், வங்கி, நிதிசார் ஒத்துழைப்பு, மருந்து உற்பத்தி, வேளாண் வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு, முதலீடு, வர்த்தக மேம்பாடு, வரிச் சலுகைகள், சரக்குப்போக்குவரத்து, துறைமுகம் தொடர்பான விவகாரங்கள் ஆகியவை இந்த விவாதத்தில் முக்கிய அம்சங்களாக இருந்தது.
சுங்கம், தரவுப் பகிர்வு ஒத்துழைப்பை மேம்படுத்துதல், மருந்து உற்பத்தி, வேளாண் உற்பத்தியில் ஒழுங்குமுறை ஒத்துழைப்பு, வர்த்தகப் போக்குவரத்தை மேம்படுத்துவது, முதலீடு, இருநாட்டு வர்த்தகங்களுக்கு இடையேயான உறவை ஊக்குவித்தல் உட்பட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டது.
திவாஹர்
