ஐஎன்எஸ் நிபுன் கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு.

இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் நிபுன், இன்று (2026 ஆகஸ்ட் 31) மும்பை கடற்படைக் கப்பல் கட்டும் தளத்தில் சேவையில் இணைக்கப்பட்டது. இது நீருக்கடியில் செயல்படுதல், நீர்மூழ்கிக் கப்பல் மீட்புத் திறன்கள் ஆகியவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டுள்ளது.

மேற்கு கடற்படை கட்டளையகத்தின் தலைமைத் தளபதியான வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் முன்னிலையில், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் இந்த கப்பலின் இணைப்பு விழாவிற்குத் தலைமை தாங்கினார் . மூத்த கடற்படை அதிகாரிகள், விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் பிரதிநிதிகள், முன்னாள் படைவீரர்கள், சிறப்பு விருந்தினர்கள், கப்பல் குழுவினரின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் நிபுன், நீருக்கடியில் செயல்படும் திறன் கொண்டதாகும். கடற்படையில் இதன் சேர்க்கையானது, தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவின் வளர்ந்து வரும் திறனை வெளிப்படுத்துவதோடு, பாதுகாப்பு கப்பல் கட்டுமானத்தில் தற்சார்பை நோக்கிய மற்றொரு முக்கிய படியாகவும் அமைந்துள்ளது. மேலும், கடற்படையின் உள்நாட்டுத் திறனை வலுப்படுத்துவதில் இந்தியக் கப்பல் கட்டும் தளங்கள், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பையும் இது பிரதிபலிக்கிறது.

ஐஎன்எஸ் நிபுன், நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் திறனையும் கொண்டுள்ளது. இது நீருக்கடியில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொண்டு இந்திய கடற்படையின் திறனை கணிசமாக வலுப்படுத்தும். மற்றொரு கப்பலான ஐஎன்எஸ் நிஸ்தாருடன் இணைந்து, இக்கப்பல் கடற்படையின் சிறப்புத் திறனைப் பெருமளவில் மேம்படுத்தும்.

உலகின் ஒரு சில கடற்படைகளிடம் மட்டுமே இதுபோன்ற தனித்துவமான திறன்கள் உள்ளன. இது கடலுக்கு இந்தியாவின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கும்.

Leave a Reply