மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள வாகனத் தொழிற்சாலையில், ரூ.472 கோடி மதிப்பிலான டி-ரக பீரங்கிகள் பழுதுபார்ப்புத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ் உடன் இணைந்து அடிக்கல் நாட்டினார். பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இத்தொழிற்சாலையில், ஆண்டுக்கு 80 டி-72, டி-90 ரக பீரங்கிகளை முழுமையாகச் சீரமைக்கும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்துவதில் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல் என்றார். நவீன போர் சூழலில் ட்ரோன்கள், ஏவுகணைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்த போதிலும், பீரங்கிகளின் முக்கியத்துவம் குறையவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை கடந்த நான்கு தசாப்தங்களில் சுமார் 4,400 பீரங்கிகளை வழங்கி ராணுவத்திற்குப் பங்களித்துள்ளதை அவர் நினைவுகூர்ந்தார்.
பாதுகாப்புத்துறையில் தற்சார்பு அடைவதற்கான அரசின் தொடர் முயற்சிகளால், நாட்டின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1.80 லட்சம் கோடியாகவும், பாதுகாப்புத் துறை ஏற்றுமதி சுமார் ரூ.39,000 கோடியாகவும் உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தப்புதிய திட்டம் ஜபல்பூர் பகுதியைப் பாதுகாப்பு தொழில்நுட்ப மையமாக மாற்ற உதவுவதுடன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் புதிய வர்த்தக வாய்ப்புகளையும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
திவாஹர்
