இந்திய ராணுவப் படகான ‘ஐஏஎஸ்வி திரிவேணி’யில் ‘சமுத்திர பிரதக்ஷிணா’ என்ற முப்படைகளின் முதலாவது அனைத்துப் பெண்கள் சர்வதேசப் படகு பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் தாயகம் திரும்பிய முப்படைகளைச் சேர்ந்த 9 பெண் அதிகாரிகளுக்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஜூலை 30, 2026 அன்று பாராட்டு தெரிவித்தார்.
புதுதில்லியில் அதிகாரிகளுடன் உரையாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர், நான்கு பெருங்கடல்கள் வழியே சுமார் 25,500 கடல் மைல்களை உள்ளடக்கிய 314 நாட்கள் கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த அக்குழுவின் தைரியத்தையும் மன உறுதியையும் பாராட்டினார். இப் பயணத்தை பெண் சக்திக்கான ஒரு சான்றாகவும், ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கமளிக்கும் முப்படைகளின் இணைப்பு மற்றும் ஒருங்கிணைப்பிற்கான சிறந்த உதாரணமாகவும் அவர் விவரித்தார்.
பெண் அதிகாரிகள் தங்கள் அனுபவங்களை திரு. ராஜ்நாத் சிங்குடன் பகிர்ந்து கொண்டனர். அப்போது, இந்தப் பயணத்தின் சவாலான தன்மை தங்களது கடற்பயணத்தை மறக்க முடியாததாகவும் அதே வேளையில் பயனுள்ளதாகவும் மாற்றியது என்று குறிப்பிட்டனர். நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற தங்களின் தளராத அர்ப்பணிப்பே தங்களை ஊக்கப்படுத்தியதாகவும், அதுவே மகத்தான உடல் மற்றும் மன சவால்களை முறியடிக்க உதவியதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதிகாரிகளின் இந்த அர்ப்பணிப்பு தனக்கு ஊக்கமளித்து, தனது சொந்த உறுதியை மேலும் வலுப்படுத்தியதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், அவர்களின் இந்த சாதனை, உறுதியான நம்பிக்கையும் மன உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் எந்த இலக்கையும் அடைய முடியும் என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
‘சமுத்திர பிரதக்ஷிணா’வின் வெற்றி, பெண்களால் கடினமான ராணுவப் பணிகளைச் செய்ய முடியாது என்ற பழமைவாத எண்ணங்களை உடைத்தெறிந்துள்ளதாக திரு. ராஜ்நாத் சிங் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
