பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்! முன்விடுதலை என்பது சிறைக் கைதிகளின் சட்டப்பூர்வமான உரிமை அல்ல! உண்மை கசக்கத்தான் செய்யும் அதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாது! -டாக்டர் துரை பெஞ்சமின் சிறப்புக் கட்டுரை.

மேனாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு பதிலாக, நாட்டில் நடைபிணங்களாக வாழ்ந்து வரும் திருநங்கைகள், யாரும் இல்லாத அனாதைகள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழும் உரிமைகளையும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், பூரண மதுவிலக்கு போன்ற ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளும், செயல் திட்டங்களும் தான் மறைந்த பேரறிஞர் அண்ணாவிற்கும் மற்றும் அவரைப் போன்ற மறைந்த பெரும் தலைவர்களுக்கும் செய்யும் உண்மையான மரியாதையும், அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்.

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை (செப்டம்பர் 15) முன்னிட்டு, நன்னடத்தை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்வதை திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தங்கள் ஆட்சி காலத்தில் அதை நீண்டகால நடைமுறையாக செயல்படுத்தி வந்தது. சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதில் பல்வேறு விமர்சனங்களும், அரசியல் உள்நோக்கமும் இருப்பதாக இது குறித்து  பல குற்றச்சாட்டுகளும், ‘எங்களை மட்டும் விடுதலை செய்யவில்லையே’ என்ற ஒரு  சாராரின் ஒப்பாரிகளும், கூக்குரலும் இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சிறையில் இருக்கும் கைதிகளை வெளியில் கொண்டு வருவதற்கு யார் வேண்டுமானாலும் சட்ட ரீதியாக உதவி செய்யலாமே தவிர; ஒரு அரசாங்கமே அதை ஒரு கொள்கை முடிவாக செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி உண்மையிலுமே விடுதலை செய்வதாக இருந்தால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சந்தேக வழக்கிலும் மற்றும் சிறு சிறு குற்றங்களை செய்துவிட்டு ஜாமீன் எடுக்க கூட வழியில்லாமல், ஆளில்லாமல் அனாதையாக ஆயிரக்கணக்கானக் கைதிகள் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மீதெல்லாம் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுக்கு வராதக் கருணை; குறிப்பாக ஆயுள் தண்டனைக் கைதிகள் மீது மட்டும் வருவது வியப்பாக இருக்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ச.ஜோசப் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன் விடுதலை என்பது சிறைக் கைதிகளின் சட்டப்பூர்வமான உரிமை அல்ல! எனவே, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தொடர்ந்து செய்து வந்ததை ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசும் அப்படியே பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.  அதற்கு பதிலாக மேற்குறிப்பிட்ட விளிம்பு நிலை மக்களின் துயர்துடைப்பதற்காக ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை அன்றைய தினம் வெளியிட்டு, போர்க்கால  அடிப்படையில் அவற்றை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும். அதுதான் உண்மையான மாற்றத்திற்கான வழிமுறையாகும்.

எனவே, குற்றவாளிகளை விடுவிக்கும் விவகாரத்தை வழக்கம்போல நீதித்துறையிடம் மட்டுமே விட்டு விடுவது நாட்டிற்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.

எல்லா மதத்திலும், எல்லா இனத்திலும், எல்லா சாதி அமைப்பிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். இங்கு எந்த மதமும், எந்த இனமும், எந்த சாதியும் உயர்ந்ததும் இல்லை; தாழ்ந்ததும் இல்லை. சட்டத்திற்கு முன்பு இங்கு அனைவரும் சமமே. இதைதான் நம் நாட்டு அரசியல் அமைப்பும் திட்ட வட்டமாக தெரிவிக்கிறது. அப்படி இருக்கும்போது குற்றவாளிகள் விசயத்தில் மட்டும் சாதி, மதம், இனம், மொழி பாசம் எங்கிருந்து வந்தது?

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக அரசியல் ஆதாயத்திற்காக சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தகைய ஆபத்தானப் போக்கை அடியோடு துடைத்து எறிய வேண்டும். இல்லையென்றால் இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும். உண்மைகள் கசக்கத்தான் செய்யும் அதற்காக நாம் சொல்லாமல் இருக்க முடியாது.

Leave a Reply