நாட்டில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது: மத்திய அரசு தகவல்.

இந்திய ரயில்வே பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. 2014-15-ம் ஆண்டில் 135 ரயில் விபத்துகள் நடந்த நிலையில், 2025-26-ம் ஆண்டில் 16 விபத்துகள் (88 சதவீதம் குறைவு) மட்டுமே நடந்தன. 2026-27-ம் நிதியாண்டில் (2026 ஜூன் வரை) 2 விபத்துகள் நடந்துள்ளன.

பாதுகாப்புத் தொடர்பான நடவடிக்கைகளுக்கான செலவினம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் ஆண்டு ரூ.39,200 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2026-27-ம் நிதியாண்டில் ரூ.1,20,389 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே லெவல் கிராசிங்குகளில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 2026 ஜூன் 30 வரை 10,395 லெவல் கிராசிங்குகளில் இண்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர்களில் விழிப்புணர்வை மேம்படுத்த அனைத்து எஞ்சின்களிலும் விழிப்புணர்வு கட்டுப்பாட்டு உபகரணம் பொருத்தப்பட்டுள்ளன. மூடுபனி பாதிப்புள்ள பகுதிகளில் ரயில் ஓட்டுநர்களுக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான மூடுபனி பாதுகாப்பு சாதனம் அளிக்கப்படுகிறது. இது சிக்னல்கள், லெவல் கிராசிங்குகளில் தூரத்தை அறிய உதவுகிறது.

இத்தகவலை ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போது தெரிவித்தார்.

Leave a Reply