பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும், அதன் கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி கொடுக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்பதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’-ன் வெற்றியே சான்றாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இன்று (2026, ஜூலை 26) டிராஸில் நடைபெற்ற 27-வது கார்கில் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர், பாகிஸ்தானுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட மாட்டாது என்றும், ஏதேனும் உரையாடல் நடத்தப்பட்டல் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மட்டுமே மையமாகக் கொண்டிருக்கும் என்றும் அவர் மீண்டும் கூறினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவர் உறுதிபட கூறினார். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான ஒவ்வொரு தீய செயலுக்கும், ‘ஆபரேஷன் சிந்தூர்’ போல, அதே உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானில், ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவிட்டதாகவும், அந்நாடு பயங்கரவாதத்தை தனது அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளது என்றும் திரு ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகக் கூறினார். பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுப்பது மட்டுமல்லாமல், அவர்களுடன் இணைந்து செயல்படுகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
கார்கில் போர் முடிந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் எடுத்துள்ள பாதைகள் முற்றிலும் வேறுபட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். இந்தியா புத்தாக்கத்திற்கான புதிய வழிகளை ஆராய்ந்து வரும் வேளையில், பாகிஸ்தான் தீவிரவாத ஊடுருவலுக்கான புதிய வழிகளைத் தேடுகிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியா “சிப்” வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வடிவமைப்பதில் மும்முரமாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தியா ஒரு புத்தொழில் சூழலமைப்பை உருவாக்கி வரும் வேளையில், பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத சூழலமைப்பைக் கட்டமைக்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்தியா செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நிலையில் பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல் நடத்துபவர்களைத் தயார்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்தியா செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை எல்லை தாண்டி அனுப்புவதில் கவனம் செலுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் தீய நோக்கங்களுடன் இந்தியாவின் செழிப்புக்கான பாதையைத் தடுக்க முயன்றால், நமது பாதுகாப்புப் படைகள் தகுந்த பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய வீரர்கள் நாட்டின் எல்லைகளைக் காக்கும் வரை, எந்தவொரு எதிரியும் இந்தியா மீது விரோதப் பார்வையை செலுத்தத் துணிய முடியாது என்று கூறிய திரு ராஜ்நாத் சிங், அச்சுறுத்தல்களுக்குத் தீர்க்கமாகப் பதிலடி கொடுக்க பாதுகாப்புப் படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் அரசியல் உறுதிப்பாடு மத்திய அரசிடம் உள்ளது என்றார்.
1999-ம் ஆண்டில் கார்கில் போரின்போது தாய்நாட்டைப் பாதுகாக்கத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்தியாவின் வீரர்களுக்குப் பாதுகாப்பு அமைச்சர் புகழஞ்சலி செலுத்தினார். பரம் வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ரா, கேப்டன் மனோஜ் குமார் பாண்டே உள்ளிட்ட, தேசத்திற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வரும் எண்ணற்ற வீரர்களை அவர் நினைவு கூர்ந்தார். தனிப்பட்ட வெற்றிக்கும் தேசியக் கடமைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொரு இளைஞருக்கும் கார்கில் வெற்றி தினம் ஒரு உத்வேக நாள் என்று அவர் குறிப்பிட்டார். தியாகம், சேவை ஆகிய உணர்வுகளே தேசத்தின் முதுகெலும்பாக அமைகின்றன என்பதை இந்த நாள் நமக்குக் கற்பிக்கிறது என்று அவர் கூறினார்.
வீரமரணம் அடைந்த நாயகர்கள் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், கார்கில் போர் நினைவகம் இந்தியா முழுவதையும் பிரதிபலிக்கிறது என்று திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். இந்த ஒற்றுமைச் சுவர் நமக்குத் தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு எதிராக உயர்ந்து நிற்கிறது என்று அவர் கூறினார்.
இந்தியா வலிமையான மற்றும் திறமையான ராணுவத்தைக் கொண்டிருந்தாலும், தேசியப் பாதுகாப்பைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தேசியப் பாதுகாப்புக்கும் வீரர்களின் நலனுக்கும் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வின் போது, பாதுகாப்பு அமைச்சர், கார்கில் போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து, 1999-ம் ஆண்டு ஆபரேஷன் விஜய்-யின் போது தங்கள் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தினார். லடாக் துணை நிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத், வடக்கு மண்டலத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பிரதீக் சர்மா உள்ளிட்டோரும் திரு ராஜ்நாத் சிங்குடன் இணைந்து கார்கில் போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திரு ராஜ்நாத் சிங், பிரமுகர்கள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தேநீர் அருந்தி கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, கார்கில் வெற்றி தின நினைவுக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சௌர்ய விஜய் யாத்ரா’ என்ற இருசக்கர வாகன பேரணியை புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியை அவர் ஜூலை 14, 2026 அன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்திருந்தார்.
பாதுகாப்புத் துறை இணையமைசரசர்ழ திரு சஞ்சய் சேத், புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். முப்படைகளின் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங ராணுவத் துணைத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சந்தீப் ஜெயின் ஆகியோரும் அங்கு அஞ்சலி செலுத்தினர்.
திவாஹர்
