இறக்குமதியை குறைத்து, தற்சார்பு நிலையை வலுவடையச் செய்வதன் வாயிலாக வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்ட முடியும்! – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

மகாநதி கடல்சார் படுகையில், துளையிடும் பணியை மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகளில், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். இதற்கென கடற்பகுதியில் துளையிடல் பணி தொடங்கப்பட்டுள்ளதன் காரணமாக, இந்தியாவின் ஆய்வு, உற்பத்தித் துறையை மாற்றியமைத்த கடந்த பத்தாண்டு கால தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சீர்திருத்த நடவடிக்கைகளின் பலனை இது வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மகாநதி கடல்சார் படுகையில், இன்று தொடங்கப்பட்ட துளையிடும் பணிகள், இந்தியாவின் மிக அதிக எரிசக்தி வளம் கொண்ட கடல்சார் படுகைகளில், முறையாக மதிப்பிடுவதற்கானத் திட்டமிடப்பட்ட நான்கு ஆழ்கடல் கிணறுகளில், இது முதலாவதாகும் என்று அவர் கூறினார். புதிய ஹைட்ரோகார்பன் வளங்களைக் கண்டறிவதற்கும், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதற்கும், உலகத்தரம் வாய்ந்த ஆழ்கடல் துளையிடல் தொழில்நுட்பம், இந்தப் பணியில் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட, முக்கியக் கொள்கை, ஒழுங்குமுறைச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம், ஆய்வு, உற்பத்திக்கானச் சூழல் அமைப்பை மத்திய அரசு அதன் அடிப்படை நிலையிலேயே மாற்றியமைத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.

ஹைட்ரோகார்பன் ஆய்வு, உரிமம் வழங்கும் கொள்கை அறிமுகம், பரிந்துரை அடிப்படையிலான அணுகுமுறைக்கு மாறாக வெளிப்படையான உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. வெளிப்படையான வருவாய் பகிர்வு கட்டமைப்பை ஏற்றுக்கொண்டது, முன்பு ஆய்வு செய்ய அனுமதிக்கப்படாத கடல்சார் பகுதிகளில், 99% பகுதிகளை ஆய்வுக்காக அனுமதி வழங்கியுள்ளது போன்ற அரசின் செயல்பாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் செயல்பாட்டில் உள்ள எரிசக்திக்கான ஆதார வளங்கள் குறித்த ஆய்வுப் பரப்பளவில் 81% பகுதிகள், 2014-ம் ஆண்டுக்குப் பிறகே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள், முதலீட்டாளர்கள், ஆய்வு நிறுவனங்களிடையே ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

அறிவியல் ரீதியிலான ஆய்வின் அவசியம் குறித்து வலியுறுத்திய அமைச்சர், இந்தியாவின் புதிய ஆய்வுப் பகுதிகளை கண்டறியும் வகையில், ‘மிஷன் அன்வேஷன், தேசிய நில அதிர்வுத் திட்டம், நீட்டிக்கப்பட்ட கண்டத் திட்டு ஆய்வு, தேசிய தரவுக் களஞ்சியம், ஹைட்ரோகார்பன் வள மதிப்பீட்டு ஆய்வு போன்ற முன் முயற்சிகள் மூலம் புவிசார் அறிவியல் தரவுகளை உருவாக்குவதில், மத்திய அரசு தொடர்ச்சியான முதலீடுகளைச் செய்துள்ளது என்றும், இதன் மூலம் உலகின் மிக விரிவான புவிசார் அறிவியல் தரவுத்தளங்களில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் திரு ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

Leave a Reply