தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், அதற்கு எதிரான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நாடு முழுவதும் உளவுத் தகவல் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் விளைவாக, வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட 27 கிலோவிற்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானக் கழிவறைகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பாத்திரங்களில் உள்ள பிரத்யேக மறைவிடங்கள், உடலுக்குள் மறைத்து வைத்தல் போன்ற கடத்தல் முறைகளை, இந்தச் சோதனை நடவடிக்கைகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. இது கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் கையாளும் மாறிவரும் செயல்பாட்டு முறைகளை எடுத்துக் காட்டுகிறது.
உளவுத் தகவலின் அடிப்படையில், அடிஸ் அபாபாவிலிருந்து வந்த மூன்று பயணிகளை, மும்பையில் வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு, விமானத்தின் பின்பகுதியில் உள்ள கழிவறையின் மேற்கூரை பேனல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த,12 கிலோ எடையுள்ள 6 வெளிநாட்டுத் தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. விமான நிலைய ஊழியர்கள் மூலம், பின்னர் அவற்றை எடுத்துக்கொள்ளும் வகையில் பயணிகள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடத்தி வரப்பட்டத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதில் ஈடுபட்டுள்ள மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
23.07.2026 அன்று, உளவுத் தகவலின் அடிப்படையில், உத்தரப் பிரதேச மாநிலம் பிரம்மபுத்திரா மெயில் ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவரை வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரிடம் மேற்கொண்ட சோதனையின் போது அவரது இடுப்புப் பட்டை, கைப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 5 கிலோ எடையுள்ள 42 வெளிநாட்டுத் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வங்கதேசம் வழியாக இந்தியாவுக்குள் தங்கம் கடத்தி வந்ததாக விசாரணையில் அவர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்
