தமிழக அரசு – விளையாட்டில் ஆர்வமுள்ள திறமைமிக்க இளைஞர்களை, மாணவர்களை அடையாளம் கண்டு உதவிக்கரம் நீட்டி விளையாட்டையும், திறமையுள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
தமிழக அரசு விளையாட்டில் ஆர்வம்மிக்க திறமைமிக்க பொருளாதார வசதியில்லாத இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவிட முன்வர வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களும், மாணவர்களும் விளையாட்டில் திறமையாக இருந்தும் பொருளாதார வசதியில்லாமல் ஆர்வம் இருந்தும் தேசிய அளவில், உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு அரியலூர் மாவட்டம், கீழ்க்காங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பானுப்பிரியா என்பவர் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கூலித்தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தனது திறமையால் சாதித்துக் காட்டியுள்ளார்.
செங்கிப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
போதிய பொருளாதார வசதி இல்லாத நிலையிலும் விடாமுயற்சியுடன் விளையாட்டில் கவனம் செலுத்தி, கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 60-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளார்.
தேசிய அளவில் பதக்கம் வென்றதன் மூலம் அடுத்த கட்டமாக நேபாளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக விளையாட தகுதி பெற்றுள்ளார். ஆனால் அவர் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கு போதிய பொருளாதாரம் இல்லாத நிலையில் பொருளாதார உதவி தேவைப்படுவதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
இவருக்கு தமிழக அரசு உதவிகள் செய்ய வேண்டும். இவரைப் போல பல்வேறு மாவட்டங்களில் பல இளைஞர்கள், மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் இருந்தும் பொருளாதார வசதி இல்லாமல் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.
இதனை தமிழக அரசும், விளையாட்டுத்துறையும் அடையாளம் கண்டு விளையாட்டையும், விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு விளையாட்டில் ஈடுபாடு மிக்க பொருளாதார வசதி இல்லாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உற்சாகமும், உதவியும் அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
