வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கை அடைய மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் ஜி.கே.என்.எம் குழுமத்தின் செவிலியர் கல்லூரியைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், தரமான சுகாதாரச் சேவைகளும், கல்வியும் நாட்டின் வளர்ச்சிக்கு இரு கண்கள் எனக் குறிப்பிட்டார். ஜி.குப்புசாமி நாயுடு தொண்டு நிறுவனம் 1952-ல் 50 படுக்கைகளுடன் தொடங்கிய மருத்துவமனை, இன்று 750 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையாக வளர்ந்து சமூகப் பணியாற்றி வருவதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
செவிலியர்களின் பங்களிப்பைக் சுட்டிக்காட்டிய அவர், நோயாளிகளுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் வழங்கும் செவிலியர்களின் கருணை மனப்பான்மை, நோயைக் குணப்படுத்துவதில் மருந்துகளுக்கு இணையான பங்காற்றுகிறது எனக் கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் கோடிக்கணக்கான மக்களுக்குத் தரமான மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்து உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருவதாகவும், மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ உதவிகள், டிஜிட்டல் தொழில்நுட்பச் சேவைகள் மூலம் மருத்துவத் துறை மேம்பட்டு வருவதாகவும் கூறினார்.
பெண்கள், குழந்தைகளிடையே ரத்த சோகையை ஒழித்தல், ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் போன்ற நல்வாழ்வு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். கண் தானம் உட்பட உடல் உறுப்புத் தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிக அளவில் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். புதிய செவிலியர் கல்லூரி சிறந்த மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், ஜி.குப்புசாமி நாயுடு அறக்கட்டளை விரைவில் மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் விருப்பம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அறக்கட்டளை நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா
