டெங்கு நோய்த் தடுப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றுக்கான இந்தியாவின் முயற்சிகளை வலுப்படுத்துவதின் முக்கிய நடவடிக்கையாக மத்திய சுகாதாரம், குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், ஜெர்மனியின் டகேடா ஜிஎம்பிஎச் நிறுவனம் தயாரித்துள்ள டெங்கு டெட்ராவேலண்ட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து சந்தைப்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளது. இது நாட்டில் டெங்கு நோய்த் தடுப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது டெங்கு தடுப்பூசியாகும்.
மருந்துகள், அழகுசாதனப்பொருட்கள் சட்டம், 1940, மருந்து விதிமுறைகள், 1945 ஆகியவற்றின்படி தடுப்பூசிகளின் தரம், பாதுகாப்பு, திறன் ஆகியவற்றின் விரிவான அறிவியல் ரீதியான மதிப்பீட்டிற்குப் பிறகு இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசியை டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு வயது முதல் அறுபது வயது உடையவர்களுக்கு செலுத்தலாம். இந்தத் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பிரேசில், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் 4 வயது முதல் 60 வயதுடையவர்களுக்கு மூன்றாம் கட்டமாக இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்தத் தடுப்பூசிக்கு ஏற்கனவே ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், சுவிட்சர்லாந்து, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 42 நாடுகளில் ஒப்புதல் கிடைத்துள்ளது. அத்துடன் உலக சுகாதார அமைப்பின் முன் தகுதியையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும், 24 மில்லியனுக்கு மேற்பட்ட தடுப்பூசிகள் விநியோகிப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட நாடுகளில் கிடைக்கப்பெற்ற தகவலின்படி பாதுகாப்புக் குறைபாடு ஏதுமின்றி சாதகமான விளைவுகளே கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் முதலாவது டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, டெங்கு நோய்த் தடுப்புக்கான இந்தியாவின் பொது சுகாதார நடவடிக்கையில் முக்கிய மைல்கல்லாகும். அத்துடன் பூச்சிகளால் பரவும் நோய்க் கட்டுப்பாட்டு தேசியத் திட்டத்தின்கீழ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கண்காணிப்பு, நோய் கண்டறிதல், நோயாளிகளுக்கான சிகிச்சை மேலாண்மை ஆகிய நடவடிக்கைகளுக்கு இது வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திவாஹர்
