மாறிவரும் சமூகச் சூழல்கள் அரசு கொள்கைகளில் பிரதிபலிப்பதை உறுதிசெய்யும் வகையில் ஓய்வூதிய விதிமுறைகளில் விரிவான மறுஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நலத்துறை ஏற்பாடு செய்திருந்த ஓய்வூதிய வழக்குகள் குறித்த இரண்டாவது தேசிய பயிலரங்கில் அவர் உரையாற்றினார். தற்போதைய விதிமுறைகள் மாறிவரும் சமூக சேவைகளுக்கு ஏற்ப அமையத் தவறியதால் பல்வேறு ஓய்வூதிய பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறினார். நீதிமன்றங்களில் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதை விட உரிய நேரத்தில் கொள்கை சீர்திருத்தங்கள் மூலம், வழக்குகளை தடுப்பதே நிர்வாகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எளிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள், மேம்படுத்தப்பட்ட குறைதீர்ப்பு, அமைச்சகங்களுக்கிடையேயான வலுவான ஒருங்கிணைப்பு, மீண்டும் மீண்டும் எழும் பிரச்சனைகள் சட்ட ரீதியான தகராறுகளாக உருவாவதற்கு முன்பாக அவற்றை முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவற்றின் மூலம் வழக்குகள் இல்லாத ஓய்வூதிய வழங்கல் சூழலை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வழக்கு மேலாண்மையை வலுப்படுத்துதல், சேவை வழங்கலை மேம்படுத்துதல், மக்களுக்கு உகந்த ஓய்வூதிய நிர்வாகத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஓய்வூதிய வழக்குகள் தொடர்பான சட்டங்களின் தொகுப்பு ஓய்வூதிய நலத்துறையின் சிறப்பு இயக்கம் 3.0 ஆகியவற்றை டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
எஸ்.சதிஸ் சர்மா
