விஜய் தலைமையில் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கி சுமார் 28 மாதங்கள் ஆகிறது. அவரது இந்த துணிச்சலான முடிவை வெளிப்படையாக பாராட்டி வாழ்த்துக் கூட தெரிவிக்க அப்போது மனம் இல்லாதவர்கள்; அப்படி அவரை வெளிப்படையாக பாராட்டினால்; அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தால் அல்லது அவருக்கு ஆதரவு வழங்கினால் தங்களது சினிமா (தொழில்) வாழ்க்கை பாதித்து விடுமோ?! என்ற பயத்தில் பதுங்கிக் கொண்டிருந்தவர்கள், இப்போது விஜய் என்ற ஜெயித்த குதிரையின் மீது பந்தயம் கட்டுவதற்கும், வெட்கமே இல்லாமல் விளக்கு வச்ச வீட்டில் சோறுத் தின்பதற்கும் முயற்சி செய்வது உண்மையிலுமே வியப்பாகவும், வேதனையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.
இவர்களை எல்லாம் பார்க்கும்போது ஏதோ ஒரு வகையில் அப்போதைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளிடம் கூலி வாங்கிக் கொண்டு வயிற்றுப் பிழைப்பிற்காகவும், ஆளுங்கட்சி கூட்டணியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெறுவதற்காகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை தனிப்பட்ட முறையில் அக்கினி வார்த்தைகளால் தொடர்ந்து அபிஷேகம் செய்து, அவர் மீது கற்பனைக்கு எட்டாத கட்டுக்கதைகளையும், அவதூறுகளையும் தொடர்ந்து கட்டவிழ்த்து விட்டு வரும் சினிமா மற்றும் ஊடகத்துறையை சேர்ந்த நபர்களை விட, மேற்கண்டவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
எனவே, இத்தகைய சந்தர்ப்பவாதிகளிடமும், ஜால்ரா பேர்வழிகளிடமும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மிகவும் விழிப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
இத்தகைய வழக்கமான வஞ்சப் புகழ்ச்சிப் பாராட்டு விழாக்களை அவர் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்! இல்லையென்றால், முந்தைய முதலமைச்சர்களுக்கும், இவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்.
மதிப்புள்ள மக்கள் பிரதிநிதிகள் இதுப் போன்ற வஞ்சப் புகழ்ச்சிப் பாராட்டு விழாக்களில் பங்கேற்பதை நாட்டு மக்கள் ஒருபோதும் ரசிப்பதும் இல்லை; அத்தகைய நபர்களை அவர்கள் ஒரு பொருட்டாக மதிப்பதும் இல்லை! இதுதான் கடந்த கால வரலாறு.
தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல; தங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும், தமிழ்நாட்டில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் நீங்கள் தான் இப்போது முதலமைச்சர்; அந்த வகையில் பொதுநோக்கத்திற்காக தங்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். அவர்களின் நியாயமான குறைகளையும், கோரிக்கைகளையும் அக்கறையோடுக் கேட்டு அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் தாராளமாக உதவி செய்யுங்கள்! அந்த வகையில் திரைப்படத் துறையை சார்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.
மற்றபடி முதுகெலும்பில்லாத நபர்கள் மற்றும் நடிகர்களிடமிருந்து முற்றிலும் விலகியே இருங்கள்! அதுதான் தங்களுக்கும் நல்லது; தமிழ்நாட்டிற்கும் நல்லது.
உண்மைக் கசக்கத்தான் செய்யும், அதற்காக அதை நாம் சொல்லாமல் இருக்க முடியாது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
