புலிகளைப் பாதுகாப்பதன் மூலம் வளமான பல்லுயிர்ப் பெருக்கமும் பாதுகாக்கப்படும்: மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்.

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் இன்று (28.06.2026) ராஜஸ்தானின் ஆல்வாரில், புலிகள் பாதுகாப்பு தொடர்பான தேசியப் பயிலரங்கைத் தொடங்கி வைத்ததுடன், புலிகள் பாதுகாப்பு, சிறுத்தைகள் திட்டம் ஆகியவை குறித்த மூன்று நூல்களையும் வெளியிட்டார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், ராஜஸ்தான் அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் பயிலரங்கம், புலிகள் பாதுகாப்பு உத்திகள் குறித்து விவாதிப்பதற்காக, இந்தியா முழுவதிலும் உள்ள வனவிலங்குப் பாதுகாவலர்கள், நிபுணர்களை ஒன்றிணைத்தது.

இந்தப் பயிலரங்கில் உரையாற்றிய அமைச்சர், புலி பாதுகாப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பாதுகாப்பது மட்டுமல்ல எனவும் மாறாக காடுகள், நீர்நிலைகள், வளமான பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவற்றைப் பாதுகாப்பதாகும் என்றும் கூறினார்.

ராஜஸ்தானின் சரிஸ்காவில் புலிகள் மீள் அறிமுகத் திட்டத்தை வனவிலங்குப் பாதுகாப்பில் ஒரு வரலாற்று மைல்கல் என்று அமைச்சர் விவரித்தார்.

2005-ல் உள்ளூர் அளவில் புலிகள் முற்றிலுமாக அழிந்துபோன நிலையில், இப்போது இங்கு 56 புலிகள் உள்ளதாக அமைச்சர் கூறினார். வெற்றிகரமான உயிரின மீட்டெடுப்பிற்கு சரிஸ்கா உலகளாவிய உதாரணமாகத் திகழ்வதோடு, எதிர்காலப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு மதிப்புமிக்க பாடங்களையும் வழங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

புலிகள் பாதுகாப்பில் நாட்டின் சாதனைகளை எடுத்துரைத்த அமைச்சர், கடந்த பத்து ஆண்டுகளில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 46-லிருந்து 58-ஆக அதிகரித்துள்ளதாகக் கூறினார். மேலும், 2022-ம் ஆண்டுக்குள் தனது காட்டுப் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனத்தின் இலக்கை இந்தியா வெற்றிகரமாக அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் சமூகங்களின் ஆதரவும் பங்களிப்புமே பன்னா, சரிஸ்கா பகுதிகளில் புலிகளை வெற்றிகரமாக மீண்டும் அறிமுகப்படுத்த உதவியது என்று அமைச்சர் கூறினார். சிறுத்தைகள் திட்டத்தின் வெற்றிக்கும் உள்ளூர் சமூகங்களின் தீவிரப் பங்கேற்பு பெருமளவில் உதவியுள்ளது என்று திரு பூபேந்தர் யாதவ் கூறினார்.

புலிகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எந்தவொரு உயிரினமும் அழிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதும், அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களை மீட்டெடுத்து மீண்டும் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுமே அரசின் நோக்கம் என்று அமைச்சர் கூறினார்.

இந்தப் பயிலரங்கில், சிறுத்தைகள் திட்டம் குறித்த ஒரு பிரத்யேக அமர்வும் இடம்பெற்றது.

பயிலரங்கில் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகள், அறிவியல் அடிப்படையிலான புலிகள் மீள் அறிமுகம், வாழ்விட பாதுகாப்பு, செயல்திறன் மிக்க மேலாண்மை ஆகியவை குறித்த திட்டமிடலுக்கு வழிகாட்டும். அதேவேளையில் தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம், மாநில வனத்துறைகள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply