தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், கடல்சார் செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, இந்தியக் கடற்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பெரிய ஆய்வுக்கப்பலான இக்ஷக் போர்க்கப்பல், 2026 ஜூன் 26 அன்று செஷெல்ஸ் நாட்டின் போர்ட் விக்டோரியா துறைமுகம் சென்றடைந்தது. செஷெல்ஸ் நாட்டின் 50-வது தேசிய தினக் கொண்டாட்டங்களின்போது, ஐஎன்எஸ் இக்ஷக் போர்க்கப்பலின் இந்தப் பயணம், இந்தியா – செஷெல்ஸ் நாடுகள் இடையேயான நீண்டகால நட்புறவு, கடல்சார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இப்பயணத்தின்போது, ஐஎன்எஸ் இக்ஷக் போர்க்கப்பல், அந்நாட்டின் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், கடல்சார் ஒத்துழைப்பு, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. செஷெல்ஸ் நாட்டுப் பாதுகாப்புப் படைகளுடன் பல்வேறு தொழில்முறை சார்ந்த கலந்துரையாடல் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. மேலும், மருத்துவ முகாம்கள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளையும், இக்கப்பல் மேற்கொள்ளும். இது இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லெண்ணம், மக்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்தும்.
இப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஐஎன்எஸ் இக்ஷக் போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்படும். இதன் மூலம், இந்தியக் கடற்படையின் திறன்கள், பிராந்திய கடல்சார் பாதுகாப்பு, ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நேரில் காணும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும்.
நட்பு நாடுகளுடனான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும், மகாசாகர் எனப்படும் பிராந்தியப் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம் என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில், அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் இந்தியா கொண்டுள்ள அர்ப்பணிப்புணர்வை ஐஎன்எஸ் இக்ஷக் போர்க்கப்பலின் இந்தப் பயணம் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
