ராணுவப் பொறியியல் சேவையின் 2023-2024-ம் ஆண்டு பிரிவுகளைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள், இன்று (ஜூன் 25, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பின் முதுகெலும்பாக ராணுவப் பொறியியல் சேவை திகழ்கிறது என்று கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார்ந்த கட்டமைப்புகளை உருவாக்குதல், பராமரிப்பதன் மூலம், ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதில், ராணுவப் பொறியியல் சேவைப் பிரிவு முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார். பாதுகாப்புப் படை வீரர்கள் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) நாட்டைப் பாதுகாப்பதில் தங்களது கடமைகளைத் திறம்படவும், செம்மையாகவும் நிறைவேற்றுவதை உறுதி செய்வதில், ராணுவப் பொறியியல் சேவை அதிகாரிகளின் திறன், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை அடிப்படையாக அமைகின்றன என்று அவர் தெரிவித்தார்.
தொழில்முறை நேர்த்தி, நாணயம், தொழில்நுட்பச் சிறப்பு, கடமை மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் மிக உயர்ந்த தரநிலைகளைக் கடைப்பிடிக்குமாறு இளம் அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார். புதுமைகளை ஏற்றுக்கொள்வது, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தாங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டத்திலும் சிறந்து விளங்க பாடுபடுவது ஆகிய பண்புகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மோதல்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் நிறைந்த இன்றைய உலகில், நாடுகளுக்கு ‘தற்சார்பு’ என்பது முக்கியத் தேவையாக மாறியுள்ளது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். நெருக்கடியான தருணங்களில், பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், தற்சார்பு நிலை கொண்ட நாடே சிறந்த நிலையில் உள்ளது என்றும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இது தெளிவாக நிரூபிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்கள், மேம்பட்ட தொழில்நுட்பம், வலுவான உள்நாட்டுத் தொழில் கட்டமைப்பு ஆகியவை ஒரு நாட்டின் செயல்பாட்டுத் தயார்நிலை, உத்திசார் செயல்திறனை மேம்படுத்துவதில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியதாக அவர் கூறினார். ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ தயாரிப்புகளை ராணுவப் பொறியியல் சேவை ஊக்குவிப்பதையும், பயன்படுத்துவதையும் கண்டு குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
தற்போது உலக நாடுகள் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இத்தகைய சூழலில், நிலையான வளர்ச்சி என்பது, அவசியமான ஒன்றாக உள்ளது என்றார். பொறியாளர்களாக, திட்டமிடல், கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்கும் பொறுப்பு ராணுவ பொறியியல் சேவை அதிகாரிகளுக்கு உள்ளது என்று அவர் கூறினார். அவர்களின் முயற்சிகள் வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதுடன், தூய்மையான, பசுமையான, நிலையான இந்தியாவை உருவாக்குவதற்கும் பங்களிக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
