தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தவும், தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும், நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை வழித்தடங்களில் அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, பாதுகாப்பான, திறன் வாய்ந்த நெடுஞ்சாலை உட்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஒழுங்கற்ற செயல்பாடுகள் வாகனப் போக்குவரத்தைப் பாதிப்பதோடு, பயணிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றன.
இதனை எதிர்கொள்ள, பல்வேறு மாநிலங்களில் அங்கீகரிக்கப்படாத வாகன நிறுத்தங்கள் உள்ள 595 முக்கியமான இடங்களைக் கண்டறிந்து, அவற்றை அகற்ற மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட நெடுஞ்சாலை பாதுகாப்பு பணிக்குழுக்களை உருவாக்கவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும் மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுகிறது.
மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள், அவசர அழைப்புப் பெட்டிகள் போன்றவை முறையாகச் செயல்படுவதை உறுதி செய்யவும், விரைவான அவசரகால மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் கள அலுவலகங்களுக்குத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
