ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டம் ராம்கரில் 20 கிலோவாட் திறன் கொண்ட ஆகாஷ்வாணி பண்பலை (எஃப்.எம்.) ஒலிபரப்பு நிலையத்தை, காணொளி வாயிலாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் அம்மாநிலத்தில் உள்ள பண்பலை ஒலிபரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 39-ஆக உயர்ந்துள்ளது. ராம்கர் ஒலிபரப்பு நிலையம் எல்லைப் பகுதியில், 80 கி. மீ. தொலைவிற்குள் வானொலி சேவையை உறுதி செய்யும். இது ஜெய்சல்மர் மாவட்டத்தின் 20,000 சதுர கி மீ பரப்பளவிற்குள் வசிக்கும் மக்கள், பல்வேறு தகவல்கள், கல்வி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பெற வழிவகுக்கும்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. வைஷ்ணவ், பிரசார் பாரதியின் செயல்பாடுகள், அணுகுமுறையில் மாற்றம் தேவை என்று வலியுறுத்தினார். விரைவான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து வரும் காலத்தில், வானொலி ஒலிபரப்புத் துறை, தனது முக்கியத்துவத்தையும், தாக்கத்தையும், தக்க வைத்துக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் நடைமுறைக்கு முன்னுரிமை மற்றும் உள்ளூரில் முக்கியத்துவம் சார்ந்த அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இத்தகைய மாற்றத்திற்கான செயல் திட்டத்தைத் உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர், உள்ளூர் கலைஞர்கள், கைவினைஞர்களை ஒலிபரப்புச் சூழலில் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
ஜெய்ப்பூரில் அமையவுள்ள செயற்கை நுண்ணறிவு தரவு மையம் குறித்தும், அமைச்சர் குறிப்பிட்டார். இது எதிர்காலத்திற்கான அடித்தளமாகவும், தொழில்நுட்ப முன்னேற்றத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க படிநிலையாகவும் அமையும் என்று அவர் விவரித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரசார் பாரதியின் தலைவர் திரு. ப்ரசூன் ஜோஷி, ஆகாஷ்வாணி, தூர்தர்ஷன் போன்ற நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இவ்விரு நிறுவனங்களும் சமூகத்துடன் வலுவான தொடர்பு கொண்டுள்ளவை என்றும், தகவல்களைப் பரப்புவதிலும், கள யதார்த்தங்களை நேயர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றி வருவதாக திரு. அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
எம்.பிரபாகரன்
