லக்னோவில் புதிய மண்டல வானிலை மையத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வானிலை ஆய்வு உட்கட்டமைப்பு பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது நாடு முழுவதும் துல்லியமான, வானிலை முன்னறிவிப்பு சேவைகளை அளிப்பதாக தெரிவித்தார்.
கடந்த பத்தாண்டுகளில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மக்கள், பேரிடர் மேலாண்மை முகமைகள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள், விமானப் போக்குவரத்துத் துறையினர் ஆகியோருக்கு வானிலை சேவைகள் வழங்கப்படும் உரையையே மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார்.
2014-ம் ஆண்டில் இந்தியாவில் 17 டாப்ளர் வானிலை ரேடார்கள் மட்டுமே இருந்ததாகவும், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒரு ரேடார் கூட இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது இந்த 50 டாப்ளர் வானிலை ரேடார்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ‘மிஷன் மௌசம்’ திட்டத்தின் கீழ் மேலும் 50 ரேடார்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் மொத்த ரேடார்களின் எண்ணிக்கை சுமார் 100-ஆக அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த விரிவாக்கம் நாடு முழுவதும் நிகழ்நேர வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்புத் திறன்களைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று கூறினார்.
திவாஹர்
