கடல் உணவு ஏற்றுமதி குறித்த தேசியப் பயிலரங்கை, ஆந்திரப் பிரதேச அரசு, மத்திய மீன்வளம் அமைச்சகம், மத்திய வர்த்தக அமைச்சகம் ஆகியவை இணைந்து, 2026 ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடத்தின. பயிலரங்கின் முதல் நாள் நிகழ்வில், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு, மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறைத் துறை அமைச்சர் திரு. சிராக் பாஸ்வான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்தப் பயிலரங்கில் மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், ஏற்றுமதி ஆய்வுக் குழு, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், நபார்டு உள்ளிட்ட முக்கிய தேசிய நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், இந்தப் பயிலரங்கில் கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், தொழிற்சங்கங்கள், பதப்படுத்துபவர்கள், புத்தொழில் நிறுவனங்கள், பிற மதிப்புச் சங்கிலிப் தரப்பினரும் கலந்துகொண்டு, கடல் உணவு ஏற்றுமதிச் சூழலமைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்தியாவை உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த கடல் உணவு ஏற்றுமதி நாடாக நிலைநிறுத்துவதை இந்தக் கலந்தாய்வுகள் வலியுறுத்தின.
திவாஹர்
