2024-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உதவிச் செயலாளர்களாக தற்போது பணியாற்றி வரும் 2024-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (20.05.2026) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்தித்தனர்.

அப்போது உரையாற்றிய குடியரசுத்தலைவர், அகில இந்திய சேவைப் பணிகள் குறிப்பாக இந்தியக் குடிமைப் பணி நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுவதாகக் கூறினார். நாடு தற்போது வளர்ச்சியின் உயர்நிலையை அடைந்துள்ளதால் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இளம் வயது அதிகாரிகளுக்கு பல்வேறு துறைகளில் பணியாற்றுவதற்கான தனித்துவ வாய்ப்பு கிடைக்கும் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.  பல்வேறு தருணங்களில் அவர்கள் குறிப்பிட்ட சிறப்பு பகுதிகளில் உள்ள நிபுணர்கள் குழுவுக்கு தலைமை தாங்குவார்கள் என்றும் எனவே, அவர்களுடைய கற்கும் சூழலும், வேகமும், விரைவானதாக இருக்க வேண்டும் என்று கூறினார். பல்வேறு துறைகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் அவர்களுடைய திறன் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதிகாரிகளின் நடுநிலைமை அவர்களுடைய நேர்மைக்கான குறியீடாக இருக்கும் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். அதிகாரிகள் உணர்ச்சிவசப்படாமல் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றும் போதிலும் பரந்த நோக்கங்களை இழந்துவிடக் கூடாது என்றும் கூறினார்.

நெறிமுறைகளும் நிர்வாகமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார். அதிகாரிகள் நேர்மையாகவும் நெறிமுறையுடனும் திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.  அதே நேரத்தில் அவர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். முடிவெடுக்காமல் இருப்பது அறம் கிடையாது என்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்தார்.

Leave a Reply