மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் கீழ் இயங்கும், காசியாபாத்தில் உள்ள வடக்கு மண்டல தேசிய சோதனை மையம், ஒரு அதிநவீன காலணி சோதனை ஆய்வகத்தை நிறுவியுள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், அதிகாரிகள் போன்றோருக்கு விரிவான, நம்பகமான, உயர் துல்லியமான காலணி சோதனை சேவைகளை வழங்கும் தனது திறனை இது கணிசமாக மேம்படுத்தியுள்ளது.
இந்த மேம்பட்ட வசதியை நிறுவுவது, வேகமாக வளர்ந்து வரும் காலணித் துறைக்கான இந்தியாவின் தர உறுதி உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் , இந்தியாவின் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கும் உதவும்.
காலணிகள் அன்றாட வாழ்வின் ஓர் இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றன. நீடித்து உழைக்கக்கூடிய, வசதியான, பாதுகாப்பான, நீண்ட நேரப் பயன்பாட்டிற்கும் மாறுபட்ட சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கும் ஏற்ற தயாரிப்புகளை நுகர்வோர் அதிக அளவில் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய தரத்தை உறுதிசெய்ய, வழுக்குத் தடுப்புத்தன்மை, நீடித்து உழைக்கும் தன்மை, பொருளின் வலிமை, தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாதிருத்தல் போன்ற அளவுருக்களைச் சரிபார்க்க, கடுமையான சோதனைகளும் மதிப்பீடுகளும் தேவைப்படுகின்றன.
காசியாபாத்தில் உள்ள இந்த மேம்படுத்தப்பட்ட காலணி சோதனை ஆய்வகம், இந்தியத் தரநிலைகளுக்கு (IS) இணங்க, பலதரப்பட்ட காலணிப் பொருட்களை மதிப்பீடு செய்வதற்காக நவீன சோதனைக் கருவிகள், மேம்பட்ட உள்கட்டமைப்புகள் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது.
திவாஹர்
