பஞ்சாப், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ள நகர்ப்புற போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளைச் சார்ந்த நான்கு திட்டங்களுக்காக, ஜப்பான் அரசாங்கம் இந்தியாவிற்கு 275.858 பில்லியன் ஜப்பானிய யென் (சுமார் ரூ. 16,420 கோடி) மதிப்பிலான அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவி (ODA) கடனை வழங்க உறுதியளித்துள்ளது.
இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் இணைச் செயலாளர் திரு. அலோக் திவாரி அவர்களுக்கும், இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் திரு. கெய்ச்சி ஓனோ அவர்களுக்கும் இடையே 24.03.2026 அன்று இந்தக் கடன் பத்திரங்கள் பரிமாறப்பட்டன. இந்தத் திட்டங்களில், “பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் (கட்டம் 3) (I)” (ஜப்பான் 102.480 பில்லியன்), “மும்பை மெட்ரோ லைன் 11 திட்டம் (I)” (ஜப்பான் 92.400 பில்லியன்), “மகாராஷ்டிராவில் மூன்றாம் நிலை சுகாதார சேவை, மருத்துவக் கல்வி மற்றும் செவிலியர் கல்வி முறைகளை வலுப்படுத்தும் திட்டம் (I)” (ஜப்பான் 62.294 பில்லியன்) மற்றும் “பஞ்சாபில் நிலையான தோட்டக்கலையை ஊக்குவிக்கும் திட்டம்” (ஜப்பான் 18.684 பில்லியன்) ஆகியவை அடங்கும். இந்திய அரசுக்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமைக்கும் (JICA) இடையே கடன் ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.
பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் (கட்டம் 3) (I), வெகுவிரைவுப் பொதுப் போக்குவரத்து அமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், பெங்களூரு பெருநகரப் பகுதியில் அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவையைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், நகர்ப்புறச் சூழலை மேம்படுத்தி, அதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலமும் மாசுபாட்டைக் குறைப்பதன் மூலமும், இறுதியில் பருவநிலை மாற்றத்தைத் தணிக்கும்.
மும்பை மெட்ரோ லைன் 11 திட்டம் (I), வெகுவிரைவுப் போக்குவரத்து அமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம் மும்பையில் அதிகரித்து வரும் போக்குவரத்துத் தேவையைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், நகர்ப்புறச் சூழலை மேம்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் மோட்டார் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்தல் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதன் வழியாக இறுதியில் பருவநிலை மாற்றத்தைத் தணித்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மூன்றாம் நிலை சுகாதார சேவை வழங்கல், மருத்துவக் கல்வி முறை மற்றும் செவிலியர் கல்வி முறையை வலுப்படுத்துவதற்கான திட்டம் (I), மூன்றாம் நிலை மருத்துவ வசதிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளைக் கட்டுவதன் மூலம் சுகாதார அமைப்பை வலுப்படுத்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மருத்துவ சேவையின் அணுகலையும் தரத்தையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை (UHC) ஊக்குவிப்பதற்கு மேலும் பங்களிக்கும்.
பஞ்சாபில் நிலையான தோட்டக்கலையை மேம்படுத்துவதற்கான திட்டம், அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களில் பல்வகைப்படுத்துதல், வலுவான மதிப்புச் சங்கிலிக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் நிலையான தோட்டக்கலையை ஊக்குவிப்பதையும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பஞ்சாபில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
1958-ஆம் ஆண்டு முதல் இந்தியாவும் ஜப்பானும் நீண்ட மற்றும் பயனுள்ள இருதரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்தியா-ஜப்பான் உறவுகளின் முக்கியத் தூணான பொருளாதார ஒத்துழைப்பு, கடந்த சில ஆண்டுகளில் சீராக முன்னேறியுள்ளது. இது இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் ஒருங்கிணைத்து வலுப்படுத்துகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
