துங்குஸ்கா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கும், பி8ஐ நீண்ட தூர கடல்சார் உளவு விமானத்தை கிடங்கு மட்டத்தில் ஆய்வு செய்வதற்கும், பாதுகாப்பு அமைச்சகம் மொத்தம் ரூ.858 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், 2026 மார்ச் 27 அன்று புது தில்லியில் உள்ள கர்த்தவ்ய பவன்-2 இல் கையெழுத்திடப்பட்டன.
துங்குஸ்கா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு
இந்திய ராணுவத்திற்காக ரூ.445 கோடி மதிப்பிலான துங்குஸ்கா வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம், பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் ரஷ்யாவின் ஜே.எஸ்.சி ரோசோபோரோனெக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் கையெழுத்தானது. இந்த அதிநவீன ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவின் பல்லடுக்கு வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும். இந்த ஒப்பந்தம், இந்திய-ரஷ்ய மூலோபாய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்.
பி8ஐ விமானத்தின் பரிசோதனை
இந்தியக் கடற்படைக்கான பி8ஐ நீண்ட தூர கடல்சார் உளவு விமானத்தை, ‘இந்தியாவிலேயே வாங்கு’ (Buy India) பிரிவின் கீழ் 100% உள்நாட்டு உள்ளடக்கத்துடன் ஆய்வு செய்வதற்கான (பணிமனை நிலை) ரூ. 413 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், போயிங் நிறுவனத்தின் முழு உரிமையுடைய இந்தியத் துணை நிறுவனமான போயிங் இந்தியா டிஃபென்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், இந்திய அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ மற்றும் ‘மேக்-இன்-இந்தியா’ உறுதிப்பாட்டிற்கு இணங்க, நாட்டிலேயே உள்ள பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் முழுமையான சீரமைப்பு (MRO) மையத்தில் பி8ஐ விமானக் குழுவின் பணிமனை நிலை பராமரிப்பை உறுதி செய்யும் .
திவாஹர்
