இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் எல்பிஜி விநியோக நிலைமை முழுமையாகப் பாதுகாப்பாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறுகிறது. அனைத்து சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. நாடு முழுவதும் எங்கும் பெட்ரோல், டீசல் அல்லது எல்பிஜிக்கு பற்றாக்குறை இல்லை. நியாயமற்ற பீதியைப் பரப்புவதற்காக, வேண்டுமென்றே தீங்கிழைக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட தவறான தகவல் பிரச்சாரத்தால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சகம் கேட்டுக்கொள்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல்: பற்றாக்குறையில்லை, பங்கீட்டில்லை.
1. இந்தியா எரிசக்திப் பாதுகாப்பின் ஒரு சோலையாகும். பெட்ரோலியப் பொருட்களைச் சுத்திகரிப்பதில் உலகின் 4வது பெரிய நாடாகவும், 5வது பெரிய ஏற்றுமதியாளராகவும் இந்தியா திகழ்கிறது. இது 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குகிறது. இந்தியா உலகிற்கு நிகர ஏற்றுமதியாளராக இருப்பதால், உள்நாட்டு பெட்ரோல் மற்றும் டீசல் கிடைப்பது கட்டமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சில்லறை எரிபொருள் நிலையங்கள் அனைத்தும் தடையின்றித் திறந்து எரிபொருளை வழங்கி வருகின்றன. ஒரு நிலையம்கூட விநியோகத்தைக் கட்டுப்படுத்தும்படி அறிவுறுத்தப்படவில்லை. உலகெங்கிலும் உள்ள நாடுகள் விலை உயர்வு, பங்கீட்டு முறை, ஒற்றை-இரட்டை வாகனக் கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய எரிபொருள் நிலைய மூடல்கள் போன்றவற்றைச் சமாளித்து வருகின்றன. சில நாடுகள் “தேசிய எரிசக்தி அவசரநிலையை” அறிவித்துள்ளன. இந்தியா அத்தகைய எந்த நடவடிக்கைகளின் தேவையையும் உணரவில்லை. மற்ற நாடுகள் பங்கீட்டு முறையைப் பின்பற்றும் வேளையில், இந்தியாவில் விநியோகப் பற்றாக்குறை இல்லை. குறிப்பிட்ட சில எரிபொருள் நிலையங்களில் பீதியுடன் பொருட்கள் வாங்கப்பட்ட தனிப்பட்ட நிகழ்வுகள், சமூக ஊடகங்களில் சில காணொளிகளால் பரப்பப்பட்ட வேண்டுமென்றே தவறான தகவல்களால் தூண்டப்பட்டன. இதுபோன்ற எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் தேவை அதிகரித்த போதிலும், அனைத்து நுகர்வோருக்கும் எரிபொருள் வழங்கப்பட்டதுடன், விநியோகத்தை அதிகரிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இரவு முழுவதும் இயங்கி வருகின்றன. மேலும், எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களின் செயல்பாட்டு மூலதனப் பிரச்சினைகளால் எந்தவொரு நிலையத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, எண்ணெய் நிறுவனங்கள், முன்பு அனுமதிக்கப்பட்ட 1 நாள் கடன் வரம்பை 3 நாட்களுக்கும் மேலாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளன.
திவாஹர்
