அரிய வகை நிரந்தர காந்தங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், லித்தியம் போன்ற முக்கிய கனிமங்களின் ஆய்வுப் பணிகளைத் துரிதப்படுத்தவும் இந்தியா தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன்மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் திறனை 5,000 டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் (தனிப் பொறுப்பு) இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட தொடர் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், நாட்டின் தற்போதைய அரிய வகை நிரந்தரக் காந்தங்களின் தேவை சுமார் 4,000 டன்களாக உள்ளது என்றும், இது 2030-ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 8,000 டன்களாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாகவும், இது உள்நாட்டு உற்பத்தித் திறன்களை விரைவாக விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.
நியோடைமியம்-இரும்பு-போரான் நிரந்தர காந்தங்கள் மீதான ஒரு முன்னோடித் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதே வேளையில் விசாகப்பட்டினத்தில் உள்ள சமாரியம்-கோபால்ட் காந்த ஆலை ஆண்டுக்கு 500 டன் ஆரம்ப உற்பத்தித் திறனுடன் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தத் திறன் அடுத்த கட்டத்தில் 2,000 டன்னாகவும், 2030-ஆம் ஆண்டுக்குள் மேலும் 5,000 டன்னாகவும் அதிகரிக்கப்படும்.
முக்கிய கனிமங்களின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, அரசு முழுமைக்குமான அணுகுமுறையின் கீழ் அமைச்சகங்கள் முழுவதும் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் டெகானாவில் உள்ள லித்தியம் இருப்புக்கள் குறித்து திருமதி மஹிமா குமாரி மேவார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், முதற்கட்ட ஆய்வுப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், மேலும் ஆய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். லித்தியம் ஆய்வுப் பணிகள் சுரங்க அமைச்சகத்தின் கீழ் வருவதாகவும், ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலும் இதேபோன்ற முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்னணுவியல், பாதுகாப்பு, வானூர்தியியல் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகள் போன்ற துறைகளுக்கு லித்தியம் மற்றும் அரிய மண் தனிமங்கள் இன்றியமையாதவை என்றும், அவை தூய்மையான ஆற்றல் மாற்றத்திற்கு ஆதரவளிப்பதிலும், நம்பகமான ஆற்றல் அமைப்புகள் தேவைப்படும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
அணுசக்தி (திருத்த) கட்டமைப்பின் கீழுள்ள விதிகள் உள்ளிட்ட சமீபத்திய கொள்கை நடவடிக்கைகள், யுரேனியம் போன்ற மூலோபாய வளங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பல முக்கிய கனிமங்களின் ஆய்வை தனியார் துறை பங்கேற்புக்குத் திறந்துவிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சமீபத்திய முன்னெடுப்புகளைக் குறிப்பிட்ட அவர், பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான உள்நாட்டுச் சூழலமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் அரிய மண் உலோக வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடற்கரை மணல் கனிமங்களிலும் பாறை அமைப்புகளிலும் அரிய புவித் தனிமங்கள் காணப்படுவதாகவும், புவியியல் நிலைமைகளைப் பொறுத்து அவற்றைக் கண்டறிய வெவ்வேறு அணுகுமுறைகள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் கூறினார். ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில பிராந்தியங்களில், பாறை சார்ந்த கனிமங்களின் குறிப்பிடத்தக்க படிவுகள் இருப்பதாகவும், அவற்றைக் கண்டறிவது ஒப்பீட்டளவில் மிகவும் சிக்கலானது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான கவலைகள் குறித்துப் பேசிய அவர், சுரங்கம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், சுரங்க அமைச்சகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குமுறை கட்டமைப்புகளின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன என்று தெளிவுபடுத்தியதோடு, சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இறக்குமதிச் சார்பைக் குறைத்தல், உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் எதிர்காலத் தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலியைக் கட்டமைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், முக்கிய கனிமங்கள் துறையில் இந்தியா தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
திவாஹர்
