குடியரசு துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன், இன்று சென்னையிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த குடியரசு துணைத் தலைவர், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பட்டமளிப்பு விழா என்பது அதிக பொறுப்புகளும் வாய்ப்புகளும் நிறைந்த ஒரு புதிய வாழ்க்கை கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று கூறினார். பட்டதாரிகள் தங்களின் தொழில்முறைத் திறமை, கருணை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.
வரலாற்றில், அறிவு மற்றும் கடல்சார் வர்த்தகத்தின் மையமாகத் தமிழகம் திகழ்ந்ததை நினைவு கூர்ந்த திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், இந்த மண்ணைச் சேர்ந்த வணிகர்கள் இந்தியாவின் கருத்துக்கள், நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றனர் என்றும், இது தேசத்தின் நம்பிக்கையான நாகரிக ஈடுபாடு மற்றும் கற்றல் மற்றும் பரிமாற்றத்திற்கான திறந்த மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் முன்மொழியப்பட்ட வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047 தொலைநோக்குப் பார்வை குறித்துக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்த இலக்கை அடைய ஒவ்வொருவரின் , குறிப்பாக இளைஞர்களின், தீவிரப் பங்கேற்பு அவசியம் என்றும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்கள் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
வேகமான தொழில்நுட்ப மாற்றத்தை வலியுறுத்திய அவர், செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் அனைத்துத் துறைகளையும் மாற்றி வருகின்றன என்றார். தொடர்ச்சியான கற்றலின் அவசியத்தை வலியுறுத்திய அவர், மாணவர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும், வாழ்நாள் முழுவதும் கற்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும், மேலும் தங்களின் முக்கியத் துறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய தொழில்நுட்பங்களிலும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மதிப்பு அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், கல்விசார் சிறப்பு என்பது நெறிமுறைகள், நேர்மை மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றில் வேரூன்றியிருக்க வேண்டும் என்று கூறினார்.
கல்விக்கு பிந்தைய வாழ்க்கை குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய குடியரசு துணைத் தலைவர், வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்றும், இரண்டையும் சமநிலையுடனும், மீள்திறனுடனும், மன வலிமையுடனும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். குறுக்கு வழிகளையும் ஆரோக்கியமற்ற ஒப்பீடுகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்திய அவர், பட்டதாரிகள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, சீராக முன்னேறி, தங்களின் தனித்துவமான பலங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.
பட்டதாரிகள் நோக்கம் மற்றும் சேவை நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும், தனிப்பட்ட சிறப்புக்கும் கூட்டு தேசிய முன்னேற்றத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் அழைப்பு விடுத்து, தமது உரையை நிறைவு செய்தார்.
இந்நிகழ்வில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன்; டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ. சி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திவாஹர்
